முன்னிரவும் முதலுறவும் இயல் 47 குணம்நிறைந்த மன்னரொடு அமைச்சர் யூசுப் குனிந்தசிரம் நிமிராமல் தொடர்ந்து செல்ல, தனைமறந்த நிலையினிலே வழியில் நின்று தாதியரும் தோழியரும் மலர்கள் தூவ, மனம் நிறைந்த தம்பதியர் மகிழ்ந் திருக்க மணவறையில் மலர்மஞ்சம் விரித் திருக்கக் கணம் நிமிர்ந்த மணமகனார் யூசுப் பெண்ணைக் காணாமல் மீண்டும் முகம் கவிழ்த்த லானார். பொன்தட்டில் பாலுடனே பழமும் கொண்டு புன்னகைத்து ஒருதோழி வந்தாள், பின்னே வெண்பட்டுத் துகிலுடுத்தி அரசி யோடு விழிபொத்தி சுலைகாவும் வந்தாள், காண்போர் கண்பட்டுப் போகுமெனக் கன்னம் தன்னில் கரும்பொட்டு மிட்டிருந்தார், கடைக்கண் ணாலே புண்பட்ட நெஞ்சினுக்கு மருந்து வேண்டிப் பொறுமைமிகு யூசுபினை சுலைகா பார்த்தாள். ‘இருவருக்கு மிடையினிலே இனிமேல் யாரும் இருப்பதற்கு வேலையிலை’ என்ற மன்னர் தருவதற்கும் பெறுவதற்கும் காத்தி ருக்கும் தம்பதியர் தம்பணியைத் தொடங்கி, வாழ்வில் ஒருவருக்குள் ஒருவரென ஒன்றிப் பொங்கும் உள்ளுணர்வு கலந்திடவே தனிமை தந்து பெருமைமிகும் பேரரசர் - அரசி மற்றும் பேரன்புத் தோழியரும் புறப்பட் டாரே! |