"வருவது வரட்டு மென்று வாழ்வினைக் கடத்தி டாமல் வருவதை முன்பே காட்டி வைத்தனன் இறைவன், நாட்டில் இருப்பவ ரெல்லாம் ஒன்றாய் இயங்கிடும் உறுதி தந்தால் பொறுப்பினைச் சுமப்பேன்!" என்று புகன்றனர் அமைச்சர் யூசுப். "மன்னவர் ஆணை யன்றி மற்றவர் ஆணை யொன்றை இந்நிலம் இந்நாள் மட்டும் ஏற்றதே இல்லை; யூசுப் தம்நல மற்று, மக்கள் தம்நலங் காக்கும் போதில் இந்நிலத் திருப்போ ரெல்லாம் யூசுபின் ஆணை ஏற்பர்!" தம்கரம் உயர்த்தி நாட்டின் தளபதி உறுதி கூற, ‘சம்மதம் எமக்கும்’ என்றே சபையினர் உரத்துச் சொல்ல ‘எம்பணி முடிந்த’ தென்று ஏந்தலர் எழுந்து நிற்க, ‘செம்மலர் யூசுப் வாழ்க !’ செப்பினர் மக்கள் வாழ்த்து. பெருந்தவம் புரிந்து வாழ்வைப் பெற்றிட்ட சுலைகா வோடு பொருந்தியே இல்லச் செங்கோல் புரிந்திட யூசுப் தம்மைத் திருமண அறைக்குக் கூட்டிச் சென்றிட நினைத்தார் மன்னர், நறுமண சுலைகா வோடு நகர்ந்தனள் அரசி யாரே! |