"முன்னிருந்த நின்முகத்தை ஓர்நா ளேனும் முற்றாகப் பார்த்ததிலை, பார்த்த தெல்லாம் என்றனையே அடிமைகொண்ட அரசி யைத்தான் என்பதை நீ நம்பிடுக! உரிமை கொண்ட இன்றைக்கே நின்னெழிலை இளமை யாவும் எனக்கென்றே காணுகின்றேன்; குறையொன்றில்லை! என்றனுக்கே குறையில்லை என்னும் போது ஏதுக்கு நீவருந்த வேண்டும்?" என்றார். "முதிர்ந்திட்ட ஒருத்திக்கு இளமை வாழ்வு முகிழ்ந்திட்ட தெனமற்றோர் மொழிந்தி டாமல், உதிர்ந்திட்ட மலரிதழை நுகர்வோ ரென்று உமையெவரும் குறைகூறி இகழ்ந்தி டாமல், அதிர்கின்ற மனத்தினிலே ஏற்றத் தாழ்வு அணுகாமல் இருவருமே சமமாய் வாழச் சிதைந்திட்ட இளமைஎழில் எனக்கு வாய்க்கச் செய்திடுவீர்!" என்றிட்டாள், சிரித்தார் யூசுப். "இழந்திட்ட செல்வத்தை, உறவை, மற்றும் *இல்லறத்தின் நற்றுணையை மீட்ப தேபோல் இழந்திட்ட காலத்தை - இளமை ஏதும் எவராலும் மீட்பதற்கு இயன்றி டாது இழந்திட்ட உணர்வோடு ஏங்கி நிற்போர் இருப்பதையும் இழந்திடுவர், எனினும் உள்ளம் இழக்காமல் உள்ளுணர்வில் இளமை காத்தால் என்றென்றும் முதுமையின்றி இருப்போம்!" என்றார். "உருவத்தால் உள்ளத்தால் உணர்வால் என்னை உம்மோடு இணைத்திட்ட இறைவன் என்றன் பருவத்தை மட்டினிலும் பறித்துக் கொண்ட பாபத்தைப் போக்கிடவே வேண்டு கின்றேன்! தருமத்தைக் காத்திடவே காக்க வைத்தத் தகைமிக்க நாயகரே, உமக்கு ஏற்ற பருவத்தின் மெய்யுணர்வை எனக் களிக்கப் பரம்பொருளை வேண்டிடுவீர்!" என்று கேட்டாள். *முதற் கணவர் அஜீஸை இழந்துவிட்டு, மறுமணம் செய்து கொண்டதைச் சுட்டிக்காட்டுவது. |