பக்கம் எண் :

245


"விரும்புவதைத் தருகின்ற இறைவ னின்பால்

      வேறொருவர் வேண்டுவது முறைமை யல்ல,

விரும்புகின்ற வேட்கையினை நீயே கேட்பின்

      விரைவினிலே தந்திடுவான்! ஆனால் ஒன்று,

தருவதையே பெறுவதற்கும், பெற்ற வற்றின்

      தகைமையினைப் பேணுதற்கும் பயின்றோ மாயின்,

வருவதற்கோ இழந்ததற்கோ வருந்தி டாமல்  

      வாய்த்ததிலே மகிழ்ந்திடலாம்!" என்றார் யூசுப்.

 

"பேச்சாலே கேட்பவரைக் கிறங்க வைக்கும்      

      பேரறிவு படைத்திட்ட அமைச்ச, விழி

வீச்சாலே கனவினிலே எனைம யக்கி         

      வெற்றிகொண்ட கட்டழகா; மினுக்கும் சாயப்

பூச்சாலே நரைமறைத்துத் தளர்ந்த மேனி     

      பொய்யான பொலிவுபெறச் செய்து வந்தேன்

ஏச்சாலே நகைக்காமல் ஏற்பீ ராயின்         

      எனைப்போன்ற பேறுடையாளில்லை!" என்றாள்.

 

"அழிகின்ற ஆசைக்கோ, அரச வாழ்வின்       

      அதிகாரம் புரிதற்கோ, பருவ வேட்கை

பொழிகின்ற உணர்வுக்கோ. கணநே ரத்தில்    

      போகின்ற உடலின்பம் பெறுவ தற்கோ

எழிலுக்கோ - இளமைக்கோ இணைந்தோ மென்று

      இல்லாமல் எல்லாமும் தருமில் வாழ்வுப்

பொழிலுக்குள் நுழைந்திட்டோம்!" என்றார் யூசுப்.

     புன்னகைத்து முகம்சிவக்க சுலைகா சொல்வாள்:

 

"நரைபட்டு மெய்தளர்ந்தேன் என்ற போதும்    

     நல்லிளமை இழந்திட்டேன் என்ற போதும்

குறைபட்டுக் கொள்ளாமல் உவந்து ஏற்கும்    

     குணக்குன்றே, உம்மிடத்தே முன்னர் ஓர்நாள்

முறையற்ற உறவினுக்கு முயன்ற தற்கும்      

     முற்றினிலும் பொய்யான் குற்றம் கூறி  

சிறையிட்ட செயலினுக்கும் நாணும் என்றான்  

     சிறுமதியை மன்னிப்பீர்!" என்று கேட்டாள்