பக்கம் எண் :

246


"தன்குறையை மறைத்திடவே பிறர்பால் குற்றம்   

    சாற்றுகின்ற தந்திரத்தால் என்னைச் சாடி

வன்சிறையை வழங்கிட்டாய், அதற்கே உன்னை

    வாழ்வுமுற்றும் மனச்சிறையில் வைப்பேன்!"என்றார்,

"என்சுவனம் அதுவென்றே இருப்பேன்!" என்றாள்

     ‘இறையவனும்நின் குறையைப் பொறுப்பான்!’என்று

மண்ணுலகில் பொன்னுலகைக் காண்ப தற்கே     

    மடமயிலை அணைத்திட்டார் மானாய்ப் பாய்ந்தாள்

 

பாய்ந்தவளை வரிப்புலியாய் நொடியில் பற்றிப்

    பஞ்சணைக்கு இழுத்திட்டார், பிடியில் தப்பச்

சாய்ந்திட்டாள் கிழிந்ததவள் சட்டை, முன்னர்   

    தன்சட்டை அவள்கிழித்த தெண்ணி எண்ணி

 ஆய்ந்திட்டார் தம்மிருவர் செயலும் ஒன்றாய்  

     அமைந்ததனை நினைத்திட்டார், இருவர் நெஞ்சும்

தோய்ந்திடவே பஞ்சணைக்குத் தூக்கிச் சென்றார்

    சுலைகாவும் தனைமறந்து தொத்திக் கொண்டாள்.

 

‘முதலுறவைத் தரும் இரவைப் பேச்சி னோடு      

    முடிப்பதற்கு முடியாது!’ என்றார் யூசுப்,   

‘இதுவரைக்கும் இவ்வுணர்வைப் பதுக்கி வைத்த    

    தெப்படியோ செப்பிடுவீர்!’ என்று கேட்ட

மதுசுரக்கும் அவளிதழை இதழால் பொத்தி      

    மணவாழ்வின் தலைவாசல் திறக்க லானார்,

அதுவரையில் அகன் றிருந்த இளமைக் கோலம்   

    அத்தனையும் இருவருமே அடைய லானார்!

  - - x - -