பதிப்புரை இரண்டாண்டுகளுக்கு முன்னரே வெளிவந்திருக்க வேண்டிய இக்காப்பியத்தை இப்போதாவது வெளியிட முடிந்ததை நினைக்கும்போது நெஞ்சம் சிலிர்க்கிறது, நினைவு விரிகிறது. இதனை நிறைவேற்றித் தந்த அல்லாஹ்வின் பேரருளை நினைந்து என்தலை தானாகவே சாய்கிறது. என் இலக்கியப் பணியை ஏற்றிப் போற்றும் இனிய நண்பர்களான ஏவி. எம். ஜாபருத்தீனும், எச். ஆர். நூர்முகம்மதும் செய்த பேருதவியினால் பதிப்பிக்கப்பட்ட இதன் மூன்றாம் பதிப்பு வெளியிட்ட சில மாதங்களிலேயே முடிந்த போதிலும், முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல இதன் இரண்டாம் பாகத்தை எழுதிமுடித்து இத்துடன் சேர்த்து வெளியிட இரண்டாண்டுகள் தேவையாகி விட்டன. இதை இரண்டாம் பாகத்தோடு வெளியிடுவதற்குத் தேவையான மூலதனத்தை எங்கிருந்து பெறுவது? எப்படி வெளியிடுவது? தீவிரமாகச் சிந்தித்தேன். இரு பெரும் வள்ளல்கள் என் இதயத்தில் தோன்றி ஈந்து மகிழும் தம் எழிற்கரம் நீட்டினர். என் நோக்கத்தை முதன் முதலில் சங்கு ஹாஜி செய்யிது அப்துல் காதர் அவர்களிடம் தெரிவித்தேன். புன்னகை பூத்த அந்தப் பெருந்தகை, "இது மிகவும் முக்கியமான பணி, முழுமையாகச் செய்து முடியுங்கள்; என்னால் முடிந்ததெல்லாம் செய்கிறேன். நாங்கள் தேடுவது எங்களுக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் உரியதுதான்!" என்று கூறி ஊக்கமும் ஆக்கமும் |