| அந்தக் கைதிக்கு இந்த விசயத்தையே "இறைவன் மறக்கடித்து விட்டான்" என்று கனம் எஸ். எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் தம் தப்ஸீரில் குறிப்பிட்டிருக்கிறார். இதே விசயத்தை சைத்தான் மறக்கடித்து விட்டான்" என்று அன்வாறுல் குர் ஆன் தப்சீரின் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த இரண்டிலும் ஏற்படும் வித்தியாசம் சாமான்யமானதா? ஒன்று இறைவனைச் சொல்கிறது மற்றொன்று ஷைத்தானைச் சொல்கிறது. இரண்டுமே ஊகம்தான். இந்த ஊகத்தில் "எது சரியானது, பொறுத்தமானது?’ இதை யார்தான் தீர்மானிப்பது? நம் சக்திக்கு மீறி நடந்துவிடுவதை, ஒன்று இறைவனின் தலையிலே சுமத்துவோம், அல்லது சைத்தானின் கைகளில் தள்ளிவிடுவோம். இதுதான் சர்வ சாதரணமாகத் தப்புவதற்கு நாம் கண்டுபிடித்த வழி. இந்த வழியையே அந்த இருதப்ஸீர் ஆசிரியர்களும் நமக்குக் காட்டுகிறார்களா? இப்படி முரண்பாடுடைய-குழப்பமேற்படுத்தக் கூடிய வரலாறுகளை வைத்து ஒரு முழுமையான காப்பியத்தைப் படைப்பதில் எனக்கேற்பட்ட சிரமங்கள் எழுதி முடியக்கூடியதல்ல; காப்பியத்தின் ஒவ்வொரு பாடலுமே அதற்குச் சாட்சியங்கள்தான். இந்த வரலாற்றில் அதிக ஆதாரமுடைய சம்பவங்களைத் தேர்ந்து, வரிசைப்படுத்தி காப்பிய வடிவம் கொடுத்து, பாத்திரங்களின் தகுதிக்கேற்ப-நிகழ்ச்சிக்கேற்ப உரையாட வைத்து, அந்த உரையாடல்களின் மூலமே கவிதைச் சுவையும் காப்பியச் சுவையும் இணைய வைத்து எழுதியுள்ளேன். இதிலே சிறப்பு காண்பவர்கள் இறைவனிடம் எனக்காகப் பிரார்த்தியுங்கள். குறை காண்பவர்கள் அன்பு கூர்ந்து எனக்குத் தெரிவியுங்கள் என்று வேண்டுவதோடு, இக்காப்பியத்தை மீண்டும் மீண்டும் படித்து ஒவ்வொரு முறையும் வெவ்வேறு படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வீர்களாக! கூத்தாநல்லூர் சாரண பாஸ்கரன் |