பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
10

1ஆ

    1ஆருகதர், ‘உலகமானது காரிய காரண ரூபத்தாலே நித்திய அநித்தியமும், பிந்ந அபிந்நமும், சத்திய அசத்தியமுமாய் இருக்கும்; ஆன்மாக்கள் கர்மங்கட்குத் தகுதியாக எடுக்கின்ற சரீரங்களினுடைய அளவையே தமக்கும் அளவாகக்கொண்டிருக்கும்; பிறப்பு இறப்புகள் அநாதி; மலதாரணை முதலியவைகளாலும், ஆன்ம அறிவினாலும் உலகத் தொடர்பினின்றும் விடுபட்டு மேல் நோக்கிச் சேர்தல் மோட்சம்,’ என்றனர்.

    2
பௌத்தமதத்தில் ஒரு சாராரான வைபாஷிகர், ‘உலகமானது பரமாணுக்களின் கூட்டத்தால் உண்டாயதாய், காட்சி அளவையால் அறியக்கூடியதாய் இருக்கும்; அதன் வழித்தோன்றிய அறிவும் கணநேரமே இருக்குந் தகையது; 3வேறு ஓர் ஆன்மா இன்று; பொருள்கள் நிலைத்திருப்பவை என்று நினைக்கும் அறிவே பிறப்பு இறப்புகட்குக் காரணம்; கணந்தோறும் அழியக் கூடியவை என்று நினைக்கும் அறிவே 4மோட்சம்,’ என்றனர். மற்றொரு சாராரான சௌத்ராந்திகர் கொள்கைகளும் மேற்கூறியனவேயாயினும், ‘அநுமானத்தால் பெறப்படுவது உலகம்,’ என்பர். அதுவே அவர்களுடைய சிறப்பியல்பு. யோகாசாரர், ‘அறிகின்றவனும் அறியப்படும் பொருள்களும் மயக்குணர்வு; ஞானமே உள்ளது; அந்த ஞானமும் கணநேரமே இருக்கக்கூடியது என்றிருக்கை 5மோட்சம்,’ என்றனர். மாத்யமிகர், ‘அளவையும் அளவையால் அறியப்படும் பொருள்களும் அறிகின்றவனும் உண்டு என்று அறிதல் மயக்குணர்வு; சூந்யத்தாலே சூந்யம் என்று அறிதல் மோட்சம்,’ என்றனர்.

    6
நையாயிகர், வைசேடிகர், ‘உலகிற்கு முதற்காரணம் பரமாணுக்கள்; அநுமானத்தால் அறியப்படும் இறைவன் நிமித்த காரணம்; பிறப்பு இறப்புகள் அநாதி; இறைவனை வணங்கும்

 

1. ஆருகதர் - அருகனை வழிபடுகின்றவர்.

2. பௌத்த மதத்தில் நால்வகைப்பிரிவினர் உளராதலின், ‘ஒரு சாராரான
  வைபாஷிகர்’ என்கிறார்.

3. ‘வேறோர் ஆன்மா இன்று,’ என்றது, ‘ஞானத்தின் தோற்றமே ஆன்மா,’
   என்றபடி.

4. ‘மோட்சம்’ என்றது, மோட்சத்திற்குக் காரணம் என்றபடி.

5. மோட்சம் - மோட்சத்திற்குக் காரணம்.

6. நையாயிக வைசேடிகர்கள் ஆகிய இவ்விருவர்க்கும் கருத்து வேற்றுமை
  இருப்பினும், இங்குக் கூறப்படும் பொருள்களில் ஒற்றுமை இருத்தலின்,
  இருவரையும் சேர்த்து அருளிச்செய்கிறார்.