பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
173

பு

புழைக்கடைக்கே நின்றது ஒரு பூண்டைப் பிடுங்கிக்கொண்டுவர, இந்திரன் வச்சிரப்படையைக்கொண்டு தொடர்ந்தான் அன்றோ! அச்சரிதம் இங்கு நினைவு கூர்க. இனி, ஒருகால விசேடத்தில், ஞானத்தால் மேற்பட்ட பெரிய திருவடியும், 1‘தேவரீரையும் நாய்ச்சிமாரையும் தாங்கினேன் நான் அன்றோ?’ என்பது போன்று, 2சிவிகையார் சொல்லும் வார்த்தையைச் சொன்னான் ஆதலின், ‘நன்ஞானத்துள் அமரர்’ என்றதற்கு நித்தியசூரிகளை என்று பொருள்கோடலும் அமையும். ஆதலால், அவனுடைய ஆச்சரியங்கள் நம்மால் அளவிட்டு அறியப்போமோ? அது நிற்க. அவன் திருவருளால் காட்டின வடிவழகை அனுபவிப்போம் நாம் என்கிறார்: புயல் கருநிறத்தனன்-மழை பெய்யும் நீனிற முகிலைப் போன்று திருமேனியையுடையவன். பெருநிலம் கடந்த நல் அடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே - இதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன்,’ என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பார். ‘இவற்றால் அனுபவிக்கப் பார்க்கிறார்’ என்று 3நஞ்சீயர் அருளிச்செய்வர். பரப்பையுடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் வசிஷ்டர் என்றும், சண்டாளர் என்றும் சொல்லுகிற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான். இவர்கள் நன்மை தீமை

 

1. “ஆயிர வணர்தலை யரவுவாய்க் கொண்ட
  சேவல் ஊர்தியுஞ் செங்கண் மாஅல்
  ஓஎனக் கிளக்குங் கால முதல்வனை”

(பரி. 3 : 59-61.)

  என்ற பரிபாடற்பகுதியும், ‘ஆயிரமாகிய கிளர்ந்த தலையையுடைய
  அரவைவாய்க்கட் கொண்ட நின் ஊர்தியாகிய சேவலும் நொந்து,
  ‘செங்கண்மாலே! ஓ!’ என அலறும் காலமுதல்வன் நீ என்றது, ‘நீ இந்திரற்கு
  இளையோனாய் அசுரரை வெல்கின்ற காலத்து, ‘இவ்வெற்றி எல்லாம்
  இவனினாய அல்ல; இவனைத் தாங்கிச் செல்கின்ற என்னினாய,’ என்று
  கருடன் தன்னை வியந்திருப்ப, அக்கருத்தை ஒழித்தற்பொருட்டு, ‘நீ என்
  மெய்ம்முழுதும் தாங்க வேண்டா; ஒரு கையில் சிறு விரற்றுணை தாங்கினை
  எனின் நீ கூறியவாறேயாகும்,’ என்று அத்துணை அவன்மேல் வைப்ப,
  அவ்விரற்கு ஆற்றாது பாதலத்து வீழ்ந்து நெடுங்காலம் கிடந்து துதித்தான்;
  அத்தன்மைத்தாய வலி தாழக் கொண்ட மெய்களினுமுடையை என்றவாறு,’
  என்ற பரிமேலழகருரையும் ஈண்டு ஒப்பு நோக்கத்தகும்.

2. சிவிகையார் - சுமந்து செல்கின்றவர்; சிவிகை - பல்லக்கு.

3. நஞ்சீயர் - பட்டருடைய மாணாக்கர்; திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி
  வியாக்கியானம் அருளிச்செய்தவர்.