பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
273

லாம்படி கண்வளர்ந்தருளுகிறான் என்றபடி. 1‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ என்கிறபடியே, கண்வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பையுடைத்தாய், தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர்திரை நீள்கடலான்’ என்கிறார். 2‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ என்பது பொய்கையார் திருவாக்கு.

(6)

62

        நீள்கடல் சூழ்இலங் கைக்கோன்
        தோள்கள் தலைதுணி செய்தான்
        தாள்கள் தலையில் வணங்கி
        நாள்க டலைக்கழி மின்னே.

   
பொ-ரை : நீண்ட கடலாற் சூழப்பட்ட இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய தோள்களையும் தலைகளையும் அறுத்துத் தள்ளிய இறைவனுடைய திருவடிகளைத் தலையினால் வணங்கி வாழ்நாள்களாகிற கடலைக் கழிமின்.

    வி-கு : செய்தான் - வினையாலணையும் பெயர். தலையில்-தலையால் (வேற்றுமை மயக்கம்). ‘வணங்கிக் கழிநின்’ என முடிக்க.

    ஈடு : ஏழாம் பாட்டு. ‘இறைவன் எல்லை அற்ற இனியன் என்றீர்; அவனை அடைகின்ற வரையில் இடையிலே உள்ள காலத்தைப் போக்கும் விதம் எப்படி?’ என்ன, அதற்கு அன்றே, 3‘மனத்துக்கு இனியானுடைய குணங்களிருக்கின்றன’ என்கிறார்?

    நீள்கடல் சூழ் இலங்கைக் கோன் - ‘பரந்த கடலை அகழியாகவுடைத்தாய், அதுதானும் மிகையாம்படியான அரண்களையுடைத்தாய் இருந்துள்ள இலங்கைக்குத் தலைவன் அல்லனோ?’ என்னும் கெட்ட அகங்காரத்தாலே ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று மதியாமல் எதிரிட்ட பையலுடைய. தோள்கள் தலைதுணி செய்தான் - ‘அகப்படாதவன் அகப்பட்டான்; தப்பாமல் கொன்று விடுவோம்’ என்று பாராமல், தோள்களைக் கழித்துத் தலைகளைச் சரித்துப் போது போக்காக நின்று கொன்றபடி. தாள்கள் தலையில் வணங்கி-அவனுடைய வீர சரிதங்களைக் கொண்டு திருவடியைப் போலே போது போக்கி. நாள் கடலைக் கழிமின் - இறைவனுடைய

 

1. திருவாய். 8. 10 : 8.

2. முதல் திருவந். 19.

3. ‘சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற, மனத்துக்கினியானைப்
  பாடவும் நீ வாய்திறவாய்’ என்பது திருப்பாவை.