|
ஆய
ஆயிரத்து இவை ஓர்தல் -
ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு ஓர்ந்து அருளிச்செய்யப்பட்டவை. அதாவது, சம்சாரிகளுடைய செவ்வைக்
கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி அவனுடைய ஆர்ஜவகுணத்தை நினைத்து அருளிச்செய்யப்பட்டவை
என்பதாம். இனி, ‘இவை ஓர்தல்’ என்பதற்கு, சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.
(11)
முதற்பாட்டில்,
நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும்படியை அருளிச்செய்தார்; இரண்டாம்
பாட்டில், லீலா விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும்படியை அருளிச்செய்தார்; மூன்றாம்
பாட்டில், இரண்டு உலகத்திலும் உள்ளார்க்கு முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கிறபடியை
அருளிச்செய்தார்; நான்காம் பாட்டில், அவ்வார்ஜவ குணம் தம் அளவிலே பலித்தபடியை அருளிச்செய்தார்;
ஐந்தாம் பாட்டில், ‘நான் அவன் குணங்களை விரும்புமாறு போன்று, அவனும் என் சரீரத்தை
விரும்புகின்றான்,’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘என் சரீரத்தின் அளவு அன்றிக்கே என் ஆத்துமாவையுங்
கைக்கொண்டான்,’ என்றார்; ஏழாம் பாட்டில், அவ்வளவே அன்று; நித்திய விபூதியில் செய்யும்
ஆசையை என் பக்கலில் செலுத்துகிறான்,’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘என்னைக் குறித்து அவன்
பிறந்த பிறவிகளுக்கு முடிவு இல்லை,’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘இப்படிப் பிறந்த பிறவிகள்தோறும்
தன் இறைமைத் தன்மையோடே வந்து அவதரித்தான்,’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘அவனுடைய ஆர்ஜவ
குணத்தைப் பேசும்போது வேதமே பேசவேண்டும்,’ என்றார்; முடிவில், ‘இத்திருவாய்மொழி சம்சாரிகளுக்கு
எப்போதும் ஒக்க அநுசந்திக்கத் தக்கது,’ என்றார்.
திருவாய்மொழி
நூற்றந்தாதி
ஓடுமனம் செய்கைஉரை ஒன்றின்நில்லா தாருடனே
கூடிநெடு மால்அடிமை கொள்ளுநிலை - நாடுஅறிய
ஓர்ந்தவன்தன் செம்மை உரைசெய்த மாறன்என
ஏய்ந்துநிற்கும் வாழ்வாம் இவை.
(8)
ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
|