பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
326

கூக

கூக்குரல் கேட்கத் திருப்பாற்கடலிலே சாய்ந்தருளினவன். உறுத்தாமைக்கு ஆழமும், 1‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி’ வேண்டினபடி கண்வளர்ந்தருளுகைக்கு நெடுமையும் கூறுவார், ‘ஆழ நெடுங்கடல்’ என்கிறார். அவன் என் அருகலிலான் - ‘பிரமன் சிவன் முதலானவர்கட்குப்போல, சேய்மையும் அணிமையும் இல்லாத நடுவிடத்திலும் நிற்கின்றான் இலன், அருகில் இருக்கின்றான்’ என்பார், ‘அருகலிலான்’ என்கிறார்.

(2)

91

        அருகல் இலாய பெருஞ்சீர்
            அமரர்கள் ஆதி முதல்வன்
        கருகிய நீலநன் மேனி
            வண்ணன்செந் தாமரைக் கண்ணன்
        பொருசிறைப் புள் உவந்து ஏறும்
            பூமக ளார்தனிக் கேள்வன்
        ஒருகதி யின்சுவை தந்திட்டு
            ஒழிவிலன் என்னோ டுடனே.


    பொ-ரை :
‘குறைதல் இல்லாத பெரிய நற்குணங்களையுடைய அழிவில்லாத தேவர்களுடைய செயல்களுக்கு எல்லாம் காரணனான தலைவன், மிகப்பெரிய நீலமணி போன்ற நிறம் பொருந்திய திருமேனியையுடையவன், செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவன், மகிழ்ச்சியின் மிகுதியினால் அடித்துக்கொள்ளுகின்ற சிறகுகளையுடைய கருடப்பறவையின்மேல் மகிழ்ந்து ஏறி வீற்றிருக்கும் தலைவன், திருமகளாருடைய ஒப்பற்ற கணவன் ஆன இறைவன், என்னோடு கூடி நின்று ஒரு வழியால் உண்டாகும் இனிமையைத் தந்து நீங்குகின்றான் இலன்; அதாவது, பல வழிகளாலும் எனக்கு இன்பத்தைத் தருகின்றான்,’ என்கிறார்.

    வி-கு : ‘பெருஞ்சீர்’, முதல்வனுக்கு அடைமொழி. ‘மேனி வண்ணன்’ என்பதனை ‘வண்ண மேனியன்’ என விகுதி பிரித்துக் கூட்டுக. ‘செந்தாமரைக் கண்ணன்’ என்கிறார்: ‘தாமரைக்கண்ணான்’ என்றார் திருவள்ளுவனாரும். ‘ஏறும்’ என்பதனைக் ‘கேள்வன்’ என்பதனுடன் முடிக்க. ‘கேள்வன் என்னோடு உடன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்,’ எனக் கூட்டுக.

 

1. திருவாய். 8. 10 : 8.