பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
344

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய, அவர்கள் தலைகளிலே எம்பெருமான் திருவடிகள் நாடோறும் சேரும்,’ என்கிறார்.

    தேவ தேவன் உச்சியுள்ளே நிற்கும்-இனி, ‘எங்கே போவதாக இருந்தான்?’ என்னில், ‘அமரர் சென்னிப் பூவான தான் என் சென்னிக்கு அவ்வருகு ‘கந்தவ்ய பூமி இல்லை’ என்று என் உச்சியுள்ளே வசிக்கின்றான். ‘அயர்வு அறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கும் இருப்பையும் நினைந்திலன்,’ என்பார், ‘தேவ தேவன் உச்சியுள்ளே நிற்கும்’ என்கிறார். இனி, அவ்வருகு போக்கு இல்லை என்பார், ‘உள்ளே நிற்கும்’ என்கிறார் எனலும் ஒன்று. இனி, இத்தொடரைப் பிரித்துக் கூட்டாது, உள்ளவாறே கொண்டு, ‘என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான்’ என்று பொருள் கூறலுமாம். கண்ணபிராற்கு - உபகாரத்தைச் செய்யும் கிருஷ்ணனுக்கு. இச்சை உள் செல்ல உணர்த்தி-சர்வேஸ்வரனுக்குத் தம் பக்கல் உண்டான இச்சையைத் தாம் அறிந்தபடியை அவன் திருவுள்ளத்தில் படும்படி உணர்த்தி. வண் குருகூர்ச் சடகோபன் - சர்வேஸ்வரனுக்கு அறிவித்த அளவே அன்றி, சம்சாரிகளும் அறியும்படி செய்த உதாரரான ஆழ்வார். இச்சொன்ன ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து - இந்த எண்ணத்தோடு அருளிச் செய்த ஆயிரத்திலும் இவையும் ஓர் பத்து. எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய, நீள்கழல் சென்னி பொரும்-தனக்குப் பாங்கான சமயத்தில் ஒருகால் விண்ணப்பம் செய்ய, நாள்தோறும் ஆசை சிறிது உடையார் இருந்த இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும் இப்படிப் பொறுக்கப் பொறுக்கவும், இழவு மறக்கவும் அனுபவித்த உபகாரகன் ஆதலின் 1‘எம்பிரான்’ என்கிறார். 2ஆழ்வார் கிரமத்திலே ‘உச்சியுளானே’ என்ற பேறு. இது கற்றார்க்கு முதலடியிலே உண்டாம். பொரு என்பது ஒப்பு; ஒப்பாவது - சேர்தல்; ஆக, பொரு என்பதற்குச் சேர்தல் என்பது பொருளாம். ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்றதனால், இவர் பெற்றதுவே பேறாகக் கடவது.3

 

1. ‘கண்ணபிரான்’ என்ற இடத்தில் எல்லாப்பொருள்கட்கும் செய்யும்
  உபகாரத்தையும், ‘எம்பிரான்’ என்கிற இடத்தில், தமக்குச் செய்த
  உபகாரத்தையும் தெரிவித்தபடி.

2. பகவானுடைய அங்கீகாரத்தைக்காட்டிலும், ஆழ்வாருடைய அபிமானத்துக்கு
  ஆதிக்கியம் உண்டு என்பதனைத் தெரிவிக்கிறார், ‘ஆழ்வார்’ என்று
  தொடங்கும் வாக்கியத்தால்.

3. இதனால், இது கற்றார்க்குப் பலத்தில் பேதம் இல்லை; ‘இவர்க்கு உள்ள
  பலமே பலம்’ என்கிறார்.