ஸ்ரீ
1முதற்பத்து
முதல் திருவாய்மொழி - ‘உயர்வற’
1
உயர்வற உயர்நலம்
உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம்
அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள்
அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன்
மனனே.
பொழிப்புரை : என்
மனமே, தேவர்கள் முதலிய மற்றையோருடைய மேன்மைகள் முழுதும் இல்லை என்று கூறலாம்படி மேன்மேல்
உயர்ந்துகொண்டே செல்லுகின்ற நற்குணங்களையுடையவன் யாவனோ அவன், என்னிடத்துள்ள அறிவின்மையாவும்
நீங்க, பத்தியின் நிலையை அடைந்த அறிவைத் தந்தான்; அந்த அறிவைத் தந்தவன் யாவனோ அவன்,
மறதி என்பது சிறிதும் இல்லாத நித்தியசூரிகட்குத் தலைவன்; அந்நித்தியசூரிகட்குத் தலைவன் யாவனோ
அவனுடைய, எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற ஒளி பொருந்திய திருவடிகளைத்தொழுது பிறவிப்
பெருங்கடலினின்றும் கரை ஏறுவாய்.
விசேடக்குறிப்பு
: ‘யவன்’ என்பது ‘யாவன்’ என்ற சொல்லின்
விகாரம். மனன் - மனம்; மகரத்திற்கு னகரம் போலி என்பர்.
இப்பதிகம் நாற்சீர்
நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.
1.
நூறு பாசுரங்கள் கொண்டதொரு தொகுதியைப் ‘பத்து’ என்றும், பத்துப்
பாசுரங்கள் கொண்ட பதிகத்தைத்
‘திருவாய்மொழி’ என்றும் வழங்குவர்;
‘பத்துப்பாட்டு ஒரு திருவாய்மொழியாய், பத்துத் திருவாய்மொழி
ஒரு பத்தாய்,
இப்படிப் பத்தான ஆயிரம்’ (2. 3 : 11.) என்ற வியாக்கியானம் காண்க.
இம்முறையில், முதற்பத்து என்பதற்கு முதல் நூறு பாசுரங்கள் என்றும், முதல்
திருவாய்மொழி என்பதற்கு
முதல் பத்துப் பாசுரங்கள் என்றும் கொள்க.
இங்ஙனமே பின் வருவனவற்றிற்கும் பொருள் கொள்க.
|