|
New Page 1
கொள்ள இருக்கிறேனோ?
1மந்திர சம்பந்தமும் தம்மோடே அன்றோ? சிஷ்யனாய்க் 2கிரய
விக்கிரயங்கட்குத் தகுதியற்றவனாய் இருக்கிறேனோ? ஆன பின்னர், என் பக்கல் திருவருள்
புரியாது இருப்பாரோ?’ என்று எண்ணமிட்டுக்கொண்டு போகிற போதைத் தரிப்புப்போலே-திருவாசிரியத்தில்
நிலை; 3‘ஸ்ரீ ராமபிரான் வருவார் என்ற பேரவாவோடு நந்திக்கிராமத்தில் இருந்து
அரசை நடத்திக்கொண்டிருந்தார்’ என்கிறபடியே, பதினான்கு ஆண்டும் ஆசையை வளர்த்துக்கொண்டிருந்தாற்போலே
இருக்கிறது - பெரிய திருவந்தாதியில்; மீண்டு எழுந்தருளித் திருவபிஷேகம் செய்து கொள்ள, ஸ்ரீ
பரதாழ்வானும் 4சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெற்றாற்போல இருக்கிறது, இவர்க்குத்
திருமொழியில் பேறு.
5‘இருக்கு
யஜூர் சாமவேதங்களும், அப்படியே அதர்வணமும், மற்றும் ஒலி உருவமாக உள்ளவை அனைத்தும், எட்டு
எழுத்துக்களையுடைய திருமந்திரத்திற்குள் அடங்கி இருப்பனவாம்’ என்கிறபடியே, நான்கு வேதங்களின்
சுருக்கம் திருமந்திரமாய், அதனுடைய சுருக்கம் பிரணவமாய், அதனுடைய சுருக்கம் 6அகரம்
ஆயினாற்போன்று, திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பதிகம்; முதல் திருப்பதிகத்தின்
சுருக்கம் முதல் மூன்று திருப்பாசுரங்கள்; முதல் மூன்று திருப்பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பாசுரம்;
முதல் திருப்பாசுரத்தின் சுருக்கம், முதல் அடி. 7மற்றும், ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம்
முதலானவைகளைச் செய்த முனி புங்கவர்களும் சுருக்கியும் விவரித்தும் செய்து போந்தமை அவ்வந்நூல்களால்
தெளிக.
அவதாரிகை முற்றிற்று
1.
‘மந்திர சம்பந்தமும்’ என்றது, வசிஷ்டர் பெருமாளுக்கு உபதேசித்தார்;
பெருமாள், தம்முடைய தம்பிமார்கட்கு
உபதேசித்தார் என்பதனைத்
தெரிவித்தபடி.
2.
கிரய விக்கிரயம் - விலைக்கு வாங்கலும் விலைக்கு விற்றலும்.
3. ஸ்ரீராமா. பாலகா. 1 : 38.
4.
சொரூபத்திற்குத் தகுதியான பேறு - பாரதந்திரிய சேஷத்வம். அதாவது,
அவனுக்கேயாகத் தன்னைக்
கொடுப்பது.
5.
பாஞ்சராத்திர ஆகமம்.
6. இங்கு, ‘அகரமுதல எழுத்தெல்லாம்’ என்ற திருக்குறள் ஒப்பு நோக்குக.
7.
‘முதல் பாசுரத்திற்கு முதலடி சுருக்கமாகும் போது முதற் பாசுரத்திற்கூறிய
விக்கிரகம் விபூதி இவைகள்
எங்கே சொல்லப்படுகின்றன?’ எனில், விக்கிரக
விபூதிகள் ஆனந்தத்தைப்பற்றி இருப்பனவாதலின்,
‘நலம்’ என்று
ஆனந்தத்தை அருளிச்செய்த போதே விக்கிரக விபூதிகளும் பொருள்
ஆற்றலாற் பெறப்படுவனவாம்.
8. இங்ஙனமே, ஆசிரியர் தொல்காப்பியனார் முதலாயினாரும் தொகுத்தும்
விரித்தும் செய்திருத்தலையும்
இங்கு ஒப்பு நோக்குக.
|