பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
79

விபூதியில் வந்தால், அவ்வுலகிலுள்ளார் அனைவரும் குறிப்பு அறியுமவர்களாய், இறைவனுடைய கொள்கையினைப் பின் செல்லுகிறவர்களாய் இருப்பார்கள்; 1‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப’ என்னும்படியாய் இருக்கும் அவ்வுலகம். மேலும், அவ்வுலகத்தில் இறைவனுடைய இருப்புக் கண்டு உகக்கும் அதற்கு 2அவ்வருகு ஒன்றும் இல்லை. இவ்வுலகில் உள்ளவர்கள், இருவினைகள் காரணமாக உண்டாகும் உடல்களின் சேர்க்கையோடு கூடினவர்களாய் இறைவனுடைய சங்கற்பத்தினைப் பின் செல்லுகின்றவர்களாய் இருப்பார்கள்; மேலும், பிற கடவுளர்க்கு அடிமைப் பட்டிருக்குந்தன்மை, தமக்குத் தாமே உயிராந்தன்மை ஆகிய இவைகள் இருப்பன இவ்வுலகத்திலே ஆகையாலே, இரண்டனையும் தவிர்த்து இறைவனுக்கு உரிமைப்பட்டது இவ்வுலகம் என்று சொல்ல வேண்டுவது இங்கேயாக இருந்தது; ஆதலால், இதனைப் பல பாசுரங்களால் அருளிச்செய்கிறார்.

    இனி, இது முதல் வருகின்ற பாக்கள் எட்டனுள், மூன்று பாக்களால், 3இவ்வுலகில் சொரூபம், காத்தல், தொழில் செய்தல், தொழில் செய்யாமை ஆகிய இவைகள் இறைவனுக்கு அதீநம் என்று கூறி, அவற்றிற்குமேல் ஒரு பாட்டால்,  (7) ‘இறைவனுக்கும் உலகிற்கும் உள்ள தொடர்பு உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பினைப் போன்றது,’ என்று கூறி, மேல் ஒரு பாட்டால் (8) 4‘குத்ருஷ்டிகளை மறுத்து, மேல் ஒரு பாட்டால் (9) 5சூந்யவாதியை மறுத்து, மேல் ஒரு பாட்டால் (10) 6வியாப்தி சௌகர்யத்தைக் கூறி, ஈற்றுப்பாட்டால் இதனைக் கற்றார் அடையும் பயனைக் கூறி இப்பதிகத்தை முடிக்கின்றார்.

    அவற்றுள், இச்செய்யுளால் உலகில் காணப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் இறைவனுக்கு உரிமைப்பட்டவை என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின், படைப்புக்காலம் வந்தவாறே இவற்றை உண்டாக்கி, உண்டாக்கிய உயிர்கள் வழியாகவே அவ்வுயிர்க்குள்

 

1. திருவாய். 4. 9 : 10.

2. அவ்வருகு - அதற்குமேல்.

3. இவ்வுலகின் சொரூபம் - இவ்வுலகினுடைய தன்மை

4. குத்ருஷ்டி - மாறுபட்ட நோக்குடையவன்; அதாவது, மறை மொழிகட்கு
  நேர்ப்பொருள் காணாது மாறுபட்ட பொருள்களைக் காண்பவன் என்பது,

5. சூந்யவாதி - இல்லையென்று வாதாடுபவன்.

6. வியாப்தி சௌகர்யம் - சௌகர்யமாகப் பரந்து நிறைந்திருத்தல்.