பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
8

உருவமாக உடையனான சர்வேஸ்வரன், ‘மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து’1 என்கிறபடியே, தொடர்ந்து வருகின்ற பிறவிகளிலே தோள் மாறி நித்திய சமுசாரியாய்ப் போந்த இவரை, ‘அடியை அடைந்து உள்ளந்தேறி ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்,’2 என்று முதலிலே தம் திருவாயாலே சொல்ல வல்லராம்படியாக முதலடியிலே சிறந்த திருவருளைச் செய்தருளினான்.3

 

  அந்தத் தோஷங்களைப் போக்கியமாகக் கொள்ளுவதற்குரிய சம்பந்தத்தைக்
  கூறுவார் ‘சர்வேஸ்வரன்’ என்றும் அருளிச்செய்கிறார் இந்நான்கு
  பெயர்களையும் முதலில் அடைவே அருளிச்செய்வதற்கு இன்னம் பல படியாக
  விசேடங் கூறுவர் பெரியோர்.

1. இறைவன் திருவருள் புரிதற்கு முன்னர் ஆழ்வார் இருந்த நிலையினை
  அருளிச்செய்கிறார், ‘மாறிமாறிப் பல பிறப்பும்’ (2. 6: 8.) என்றது முதல்
  ‘சமுசாரியாய்ப் போந்த இவரை’ என்றது முடிய. இதனால், இறைவனுடைய
  நிர்ஹேதுகமான திருவருளும் பெறப்படும். தோள் மாறுகையாவது, சிவிகையார்
  ஒரு தோள் நொந்தால் மற்றொரு தோளில் மாற்றிக்கொள்ளுமாறு போன்று,
  ஒரு பிறவி போனவுடன் வேறு பிறவியை அடைகை. ‘நித்திய சமுசாரியாய்ப்
  போந்த இவரை’ என்கையாலே ‘நித்திய முக்த ஈஸ்வரர்களிலே ஒருவர்
  ஆழ்வாராக அவதரித்தார்’ என்று கூறுதல் இவருடைய பிரபாவத்தின்
  மிகுதியை நோக்கியாகும்.

2. திருவருளின் பலத்தை அருளிச்செய்கிறார் ‘அடியை அடைந்து’ என்றது முதல்
  ‘சொல்ல வல்லராம்படியாக’ என்றது முடிய. ‘அடியை அடைந்து உள்ளந்தேறி’
  என்கையாலே, கர்மங்களைச் செய்து மனம் குற்றமற்று இறைவனை
  அறிந்தவர்களில் வேறுபாடு. ‘உள்ளந்தேறி’ என்று ஞானத்தைச்
  சொல்லுகையாலே பிராமாண்யம் தோன்றும். ‘ஈறு இல் இன்பம்’ என்கையாலே,
  சுவர்க்கம் முதலிய இன்பங்களில் வேறுபாடு. ‘இரு வெள்ளம்’ என்கையாலே,
  கைவல்ய இன்பத்தில் வேறுபாடு. ‘மூழ்கினன்’ என்கையாலே, குமிழ் நீர்
  உண்ணும் போதில் தோன்றும் ஒலியைப் போன்று, இப்பிரபந்தமும் பத்தி
  வழிந்த சொல் என்பது தோன்றும், ‘இரு வெள்ளம்’ என்கையாலே,
  ‘மூழ்கினன்’என்கிறார். ‘முதலிலே’ என்றது, பத்தி தோன்றிய நிலையிலே
  என்றபடி அதாவது’ கர்மம் ஞானம் பத்தி பரபத்தி பரஞானம் பரம்பத்தி
  அர்ச்சிராதிகதியடைதல் தேசவிசேடத்தையடைதல் பகவானையடைதல்
  கைங்கரியத்தையடைதல் என்னும் இவற்றின் பின்னர்ச் சொல்லும்
  வார்த்தையை, முதலிலே சரீரத்தோடே இவ்வுலகத்தில் இருக்கச்
  செய்தேதானே, அதிலும் பத்தி தோன்றிய நிலையில்தானே, பிரபந்தத்தின்
  ஆதியில்தானே என்றபடி, ‘சொல்ல வல்லராம்படி’ என்றது, சொல்லுதலின்
  அருமை குறித்து நின்றது.

3. ‘முதலடியிலே’ என்றது, யாதொரு காரணமும் இன்மையைக் குறித்து நின்றது.
  ‘சிறந்த திருவருளைச் செய்தருளினான்’ என்றது, ‘மயர்வற மதிநலம்
  அருளினன்’ என்கிறபடியே, பத்தியின் நிலையினை அடைந்த ஞானத்தை
  உடையராம்படி நினைத்தான் என்றபடி.