பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

2

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

கிறாளாகிய ஒரு பிராட்டி, 1ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு, அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.

    2‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத்திருவாய்மொழியில் ஆற்றாமை கரைபுரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில், 3‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே ‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்; இது அவ்வாறு அன்றி, 4‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும். அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ 5உகந்தருளின நிலங்கள்? மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று: இத்திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவுபடுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிறார். மேலும், அனுபவிக்கிற இவ்வாழ்வாருடைய தன்மையாலும் இத்திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; ‘யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை 6‘பத்துடையடியவர்’ என்ற அத்திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே; ‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத்திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத்திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன் 7பயிலப்பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?

________________________________________________________

1. ஆற்றாமை - துன்பத்தினைப் பொறுத்துக்கொள்ள இயலாமை. ‘ஆற்றாமையாவது’ - பிறிது
  எவ்வுணர்வுமின்றி அவ்வாற்றாமைதானே யாவது,’ என்பர் இறையனார் களவியலுரைகாரர்.

2. திருவாய். 1 . 4 : 1

3. திருவாய். 1 . 3 : 10

4. திருவாய். 1 . 10 : 9

5. ‘உகந்தருளின நிலங்கள்’ என்றது, திவ்விய தேசங்களை.

6. திருவாய். 1 . 3 : 1

7. ‘கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ் ஞான்றும், குருத்திற் கரும்புதின் றற்றே,’

   (நாலடி . 211)

  என்ற பகுதி இங்கு ஒப்பு நோக்கல் தகும்.