பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 1

245

யாய் பூசிக்கத்தக்க மிக உயர்ந்த திருவடிகள் என்றும் பொருள் கூறலுமாம். சேர்த்து - சேர்க்க வேண்டும்; அதாவது, 1‘கொக்கு வாயும் படுகண்ணியும் போன்று, உன் திருவடிகளும் என் தலையும் சேரவேண்டும்,’ என்றபடி. ‘சேர்த்து’ என்பது வினையெச்சம் அன்று; வேண்டிக்கோடற்பொருண்மையின்கண் வந்த வியங்கோள் வினைமுற்று. ‘சேர்த்துக’ என்பது ஈறுகெட்டு நின்றது. 2‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்றார்கள்; ‘பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான். மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போன்று, இவரும் ஈறு இல் இன்பத்து இருவெள்ளத்திலே முழுகிப் பூச்சூட இருக்கின்றார் ஆதலின், ‘பற்புத்ததலை சேர்த்து’ என்கிறார்.

    ‘அப்படியே செய்கிறோம்’ என்றான்; அம்முறை பற்றாது. ஒல்லை -‘செய்துகொடு நின்று ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்; ‘இப்படி விரைய வேண்டும் இடம் உண்டோ?’ என்ன, கைம்மா துன்பம் கடிந்த பிரானே - நீ விரைந்து வந்து விழுந்தபடி அறியாயோ? 3பெரிய ஆபத்தை அடைந்தது, கூப்பிடுதற்கும் ஆற்றல் அற்று மனத்தினாலே நினைந்தது’ என்கிறபடியே, சர்வேஸ்வரனாகிய நீயும் உன்றன்னைப் பேணாமல் வந்து விழும்படியான ஆபத்தே அன்றோ?’ என்றபடியாம். யானையும் தன் அளவிலே படும் துன்பம் என்பார், ‘கைம்மாத் துன்பம்’ என்கிறார், இனி, துதிக்கை ஒழிய முழுகிற்று’ என்பார், ‘கைம் மா’ என்கிறார்’ எனலுமாம். ‘அப்படி, உமக்கு ஆபத்து உண்டோ?’ என்ன, ‘அங்கு முதலை ஒன்று; எனக்கு முதலை ஐந்து: அங்கு ஆயிரம் தெய்வ யாண்டு; இங்கு அநாதிகாலம்; அங்கு ஒரு சிறு குழி; இங்குப் பிறவி என்னும் பெருங்கடல்;

_____________________________________________________________

1. கொக்குவாயும் படுகண்ணியும்’ என்றது, ஆபரண விசேடங்களிலே பரஸ்பர பந்தகமான
  உறுப்புகளின் விசேடங்கள்.

2. ’அப்படிப் பிரார்த்தித்த பேர் உண்டோ?’ என்னும் வினாவிற்கு விடை, ‘பிள்ளாய்!’ என்று
  தொடங்கும் வாக்கியம். இவ்வாக்கியம் ‘யாவந்ந சரணௌ’ என்ற ஸ்ரீ ராமாயண
  ஸ்லோகத்தின் கருத்து. அச் சுலோகத்தை ஈண்டுத் தருகிறேன்:-

  ‘யாவந்ந சரணௌ ப்ராது : பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ
  சிரசா தாரயிஷ்யாமி நமே சாந்திர்ப் பவிஷ்யதி.’

      ‘இராஜ லஷணம் பொருந்திய தமையனாரான ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளை
  என் தலையில் எதுவரையிலும் தரிக்கமாட்டேனோ’ அது வரையிலும் எனக்குச்
  சாந்தியானது உண்டாகமாட்டாது. ‘ ஸ்ரீராமா. அயோத். 98 : 8. இது, ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ
  சத்ருக்நாழ்வானிடம் கூறியதானாலும், ஸ்ரீகௌசல்யையார் முதலாயினாரோடும்
  கூறியதாகவும் கோடல் தகும்.

3. விஷ்ணு தர்மம். 68.