பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

270

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் - ‘கிளர் ஒளி இளமை’ என்றது, 1‘மனத்தில் உண்டாகும் சிரத்தையாய், பிறந்த இச் சிரத்தை இதினின்றும் மாறி வேறு விஷயங்களில் பிறப்பதற்கு முன்னே’ என்றபடி. என்றது, ‘ஒருவனுக்கு ஒரு விஷயத்தில் ஒரு கால் சிரத்தை பிறக்கும்; அவனதனக்கே அவ்விஷயத்திலே சிரத்தை இன்மையும் பிறக்கக் கூடியதாய் இருக்கும். ஆக, பிறந்த ருசி மாறுவதற்கு முன்னே’ என்றவாறு. இனி, ‘கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்’ என்பதற்கு,  ‘அடையத் தக்கது’ என்னும் நினைவு பிறந்தாலும், 2‘கரணபாடவம் இல்லையே!’ என்று கை வாங்க வேண்டாதபடி கரணபாடவம் உள்ள போதே என்று பொருள் கூறலுமாம். உயர்வு பற்றி ‘ இளமை கெடுவதன் முன்னம்’ என்றாராயினும், இனம் பற்றிப் பால்ய யௌவன பருவங்களையும் கொள்க. 3‘பாலியத்தில் விளையாட்டில் ஆசையுள்ளவர்களாகவும், யௌவன காலத்தில் விஷயங்களை அனுபவித்தலில் பற்றுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று கூறி, ‘ஆகையாலே, பால்யத்திலே அறிவோடு கூடினவனாய் எக்காலத்திலும் புகழின்பொருட்டு முயற்சி செய்தல் வேண்டும்’ என்றும் கூறுதல் காண்க. வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் - நாட்செல்ல நாட்செல்ல வளரா நின்றுள்ள புகரை உடையவனாய் ஆச்சரியம் பொருந்திய ஆற்றலை உடையனான சர்வேஸ்வரன் நித்திய வாசம் பண்ணுகிற தேசம். ‘வளர்தல் குறைதல்கள் இயற்கையில் இல்லாத சர்வேஸ்வரனுக்கும் விகாரத்தைப் பிறப்பிக்க வல்ல தேசம்’ என்பார், ‘வளர் ஒளி மாயோன் கோயில்’ என்கிறார். 4அவதாரங்கள் போன்று தீர்த்தம் பிரசாதியாமல் தங்கி இருக்கும் தேசமாதலின், ‘மருவிய கோயில்’ என்கிறார். வளர் இளம்பொழில் சூழ் மாலிருஞ்சோலை - வளர வளர

_____________________________________________________________

    1. ‘கிளர் ஒளி இளமை’ என்பதற்கு, ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்பது பொருள். ஒளி என்றது, ஞானத்தை; அது ஈண்டு இச்சைக்கு ஆயிற்று. ‘இளமை’ என்றது, அவ்விச்சை உண்டாகும் ஆரம்ப நிலையைக் குறித்தது. அந்த இச்சை தோன்றுவது மனத்திலே ஆகையாலே ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்று பொருள் அருளிச்செய்கிறார் என்க.

    2. கரண பாடவம் -கரணங்கள் தத்தம் காரியங்களைச் செய்வதற்குத் தக்க ஆற்றலுடன் சேர்ந்திருத்தல்.

    3. ஸ்ரீ விஷ்ணு புரா. 17. 74 : 75. இது பிரஹ்லாதாழ்வான் கூற்று.

    4. ‘அவதாரங்கள் போன்று தீர்த்தம் பிரசாதியாமல்’ என்றது, ‘அவதாரங்கள் போன்று அவ்வக்காலத்தோடு முடிவு பெறாமல்’ என்றபடி. தீர்த்தம் பிரசாதித்தல் - முடிவுறுதல். திருவிழாக்காலங்களில் முடிவுறும் நாளைத் ‘தீர்த்தவாரி’ என்று கூறுதல் வழக்கு.