பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

212

பத்தாந்திருவாய்மொழி - பா. 1

269

212

        கிளர்ஒளி இளமை கெடுவதன் முன்னம்
        வளர்ஒளி மாயோன் மருவிய கோயில்
        வளர்இளம் பொழில்சூழ் மாலிருஞ் சோலை
        1
தளர்விலர் ஆகில் சார்வது சதிரே.

    பொ - ரை : ‘பொங்கி வருகின்ற ஒளியையுடைய இளமைப்பருவம் கெடுவதற்கு முன்னே, வளர்கின்ற ஒளியோடு கூடிய மாயவன் எழுந்தருளியிருக்கின்ற கோயில், வளர்கின்ற இளமையையுடைய சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலையைத் தளர்ச்சி அற்று இருக்க விரும்பு வீராகில் சென்று சேர்வதே மேலான பேறு’ என்பதாம்.

    வி-கு : ‘கெடுவதன் முன்னம் தளர்விலராகில், சார்வது சதிர்’ எனக் கூட்டுக. ‘கோயிலாகிய மாலிருஞ்சோலை’ என்க. சார்வது தொழிற்பெயர்.

    ஈடு : முதற்பாட்டு. 2‘திருமலையை அடைகையே இவ்வாத்துமாவுக்கு நிரதிசயமான பேறு’ என்கிறார்.

    ‘திருமலையை அடைமின்’ என்கிறார்; ‘செய்கிறோம்’ என்று ஆறியிருந்தார்கள்; ‘கெடுகின்றவர்களே! எதனை நம்பித்தான் நீங்கள் ஆறியிருக்கிறீர்கள்?’ ‘கழிந்த பருவத்தை உங்களாலே தான் மீட்கப் போமோ? மேலும், 3‘காதலியான சீதை தூரத்திலிருக்கிறாள் என்று எனக்குத் துக்கம் இல்லை; ஒருவனால் அபகரிக்கப்பட்டாள் என்று எனக்குத் துக்கம் இல்லை; வயதானது பயன் இன்றிக் கழிகின்றதே என்று அதற்கே நான் துக்கிக்கிறேன்,’ என்றும், 4‘வாள்களாகி நாள்கள் செல்ல’ என்றும் முன்னையோருடைய வார்த்தைகளும் இருக்கின்றனவே? ஆதலால், ‘கிளர்ஒளி இளமை கெடுவதன் முன்னம் சார்மின்’ என்கிறார்.

_____________________________________________________________

1. ‘தளர்விலராகி’ என்பதும் பாடம்.

2. ‘சார்வது சதிரே’ என்றதனைக் கடாஷித்து அவதாரிகை.

3. ஸ்ரீராமா. யுத். 5 : 5. இங்கு 29-ஆம் பக். குறிப்புரை பார்க்கவும்.

4. திருச்சந்த விருத்தம், 112. இப்பாசுரத்தோடு,

  ‘நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
  வாள் அது உணர்வார்ப் பெறின்.’

  என்ற திருக்குறள் ஒப்புமையுடையது.