பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பத

268

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

பத்தாந்திருவாய்மொழி - ‘கிளரொளி’

முன்னுரை

    ஈடு : 1மேல் ‘எம் மா வீடு’ என்னும் திருவாய்மொழியிலே ‘அறுதியிட்ட பேற்றினைப் பெறுகைக்குத் திருமலையை அடைகிறார்’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமலையாண்டான் பணிப்பர். எம்பெருமானார், ‘அங்ஙனம் அன்று; இவர் மேல் திருவாய்மொழியிலே பாட்டுகள் தோறும் ‘ஒல்லை’, ‘ஒல்லை’ என்றும், ‘காலக் கழிவு செய்யேல்’ என்றும் விரையப் புக்கவாறே, 2‘நமக்கும் அறிவித்து, 3நாமும் இவர் காரியம் செய்வதாக அறுதியிட்டால், அதனைக்கொண்டு சரீரத்தின் முடிவில் பேறு தப்பாது’ என்று அறுதியிட்டு வாளா இருக்கலாய் இருக்க, இவர் இப்படி விரைவது இச்சரீரத்தோடே இவரை நாம் அடிமை கொள்ள வேண்டும் என்று போலே இருந்தது; இனி இவர்க்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான இடம் ஏதோ’ என்று ஞாலத்தூடே நடந்து உழக்கிப் பார்த்து வரச்செய்தே  ‘இவ்விடம் சால ஏகாந்தத் தலமாய் இருந்தது’ என்று திருமலையிலே சந்நிதி பண்ணியருளி, ‘நாம் உமக்கு முகந்தருகைக்காக வந்து நின்றோம்; நீர் இங்கே வந்து நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறி அனுபவியும்’ என்று தெற்குத் திருமலையிலே நிற்கின்ற நிலையைக் காட்டிக்கொடுக்க, இவரும் அதனை அநுசந்தித்துப் பகவான் பிராப்பியனானால் அவன் வாழும் தேசமும் பிராப்பியமாகக் கூடியதாதலின், திருமலையோடு, அதனோடு சேர்ந்த அயன்மலையோடு புறமலையோடு, திருப்பதியோடு, போம் வழியோடு, ‘போகக்கடவோம்’ என்று துணியும் துணிவோடு வேற்றுமை அறப் பிராப்பியாந்தர்க்கதமாய் அனுபவித்து இனியர் ஆகிறார்’ என்று அருளிச்செய்வார்.

_____________________________________________________________

1. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சார்வது சதிரே’ ‘அடைவது திறமே’ என்பன போன்ற
  பாசுரங்களைத் திருவுள்ளம்பற்றிப் பிராபகபரமாக ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம். ‘எழுவது
  பயனே’ என்பது போன்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றிப் பிராப்பிய பரமாக}
  எம்பெருமானார் நிர்வாஹம்.

2. ‘நமக்கும் அறிவித்து’ என்றது, மேல் திருவாய்மொழியில் ‘தனக்கேயாக எனைக்
  கொள்ளும் ஈதே’ என்பது போன்று வருகின்றவைகளைத் திருவுள்ளம் பற்றி.

3. ‘விடலில் சக்கரத்து அண்ணலை’ என்ற பாசுரப்பகுதியை நோக்கி, ‘நாமும் இவர் காரியம்
  செய்வதாக அறுதியிட்டால்’ என்கிறார்.