பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

மண

36

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் - பூமியையும் தெய்வ உலகங்களையும் வெள்ளம் கொள்ளப்புக, அவற்றுள் ஒன்றும் தப்பாதவாறு ஒரேகாலத்தில் அவற்றை எல்லாம் எடுத்துத் தன் திருவயிற்றிலே வைத்துக் காத்த நம் கண்ணன். காத்தல் அவனுக்குத் 1தாரகமாகையாலே ‘உண்ட’ என்கிறார்; இன்றேல், ‘காக்கும்’ என்ன அமையும். ‘ஆயின், உலகத்தை விழுங்கினவன் கிருஷ்ணனோ?’ என்னில், ஆம் கிருஷ்ணனே; 2அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் அன்றோ யசோதை? ஆக, இதனால், இப்படி உலகங்களையுமுடையனாய், உடைமை நோவுபட விட்டிருக்கையன்றி, பிரளய ஆபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கும் என்பதனைத் தெரிவித்தபடி கண் - சர்வ ரக்ஷகனான கிருஷ்ணனே உலகத்துக்குக் கண். 3‘உலகங்களுடைய தோற்றமும் கிருஷ்ணனே; காணப்படுகிற சராசரங்களாகிற எல்லாம் கிருஷ்ணன் பொருட்டாகவே இருக்கின்றன; இது பிரசித்தம்’ என்கிற பிரமாணப் பிரசித்தி இருக்கிறபடி.

    4அல்லது இல்லை ஓர் கண்ணே - அவன் அல்லது களைகண் ஆவார் வேறு ஒருவரும் இலர். ‘கண்’ என்பதற்குக் காப்பவன் என்னும் இப்பொருளைத் தவிர, இதனை வெறுஞ்சொல் அளவிலே கொண்டு, 5‘பீலிககண்’ என்று கூறும் வழக்கு உண்டு அன்றோ? அவ்வாறு வழங்கக்கூடிய பொருளும் வேறு ஒன்று இல்லை என்பார்,.

_____________________________________________________________

1. தாரகம் - தரித்திருப்பதற்குக் காரணமாய் இருப்பது.

2. ‘ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட
  வையம் ஏழுங்கண் டாள்பிள்ளை வாயுளே’

(பெரியாழ். திரு 1 : 6)

3. மஹாபாரதம். பீஷ்ம பர்வம்.

4. ‘அரும்பொருள்இவன் என்றே அமரர்கணம் தொழுது ஏத்த
  உறுபசி ஒன்றின்றி உலகடைய உண்டனையே’

(சிலப். ஆய்ச்.)

  என்னும் பகுதியும் ‘அறுபொருள் -அற்ற பொருள்; வினைத்தொகை: ஐயமற்ற பொருள்
  என்றாயிற்று. இனி, அறுபொருள் - தீர்ந்த பொருள் என்றுமாம்; அற்ற காரியம்
  என்றாற்போல. இனி, அறுபொருள் - ஆறு சமயத்தாரும் துணிந்த பொருள் என்றுமாம்.’
  என்ற அடியார்க்கு நல்லார் உரைப்பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கி மகிழ்தற்குரிய.

5. ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!
  கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே!’

  என்ற சிலப்பதிகாரப் பகுதியில், ‘என்ன கண்?’ என்பதற்கு முன்னர்க் கூறியவாறே கூறுக;
  ‘பீலிக்கண்ணும் உண்டாகலின்’ என்னும் உரைப்பகுதி ஈண்டு நோக்கத் தகும்.