என
இரண்டாந்திருவாய்மொழி - பா. 1 |
35 |
என்றது, உறுதி என்றபடி.
இது பரமபதத்திற்கு அடைமொழி. உறுதியாவது, 1ஆவிர்ப்பாவ திரோபாவ ஜன்ம நாச விகல்பங்கள்
என்னுமவை இல்லாமையாலே கர்மம் காரணமாக வரும் அழிவு இல்லாமை. ‘ஆயின், விமானம் கோபுரம் மண்டபம்
முதலியனவாகநிலை மாறுதல் நித்திய விபூதியில் உளவே?’ எனின், அவை இச்சை காரணமாக வருகின்றவை
ஆதலின், குற்றம் அன்று; அவை அழிவாயும் தோற்றா. எவ்வாறாயினும், இவ்வுலகங்களைப் போன்று
கருமங்கள் காரணமாக வருகின்ற தோற்றக் கேடுகள் இலவாதலின் ‘திண்ணம்’ என்கிறார்.
எண்ணின் மீதியன் - எல்லை இல்லாத கல்யாண குணங்களையுடையவன். ஆக, இவ்விரண்டாலும் எல்லா
உலகங்களையும், எல்லா நற்குணங்களையும் உடையவன் என்பதனைத் தெரிவித்தபடி.
இனி, 2‘திண்ணன்
வீடு முதல் முழுதுமாய்’ என்பதற்கு மோக்ஷம் கைவல்யம் செல்வம் ஆகிற உறுதிப் பொருள்களைக்
கொடுக்கிறவன் என்றும், ‘எண்ணின் மீதியன்’ என்பதற்கு, ‘எண்ணுக்கும் மேற்பட்ட மோக்ஷம் முதலான
உலகங்களை உடையவன்’ என்றும் கூறலுமாம். அன்றி, ‘திண்ணன் வீடு முதல் முழுதுமாய்’ என்பது, மோக்ஷம்
முதலான உறுதிப்பொருள்களைக் கொடுக்கிற கொடையாகிற குணம் ஒன்றனையே கூறுவதாகக் கொண்டு, எண்ணின்
மீதியன் என்பது, எண் இல்லாத மற்றை நற்குணங்களைக் கூறுகிறது என்று கோடலுமாம். ஆக, குணங்களாலேயாதல்,
உலகங்களாலேயாதல் வந்த அளவிட முடியாத தன்மையைச் சொல்லுகிறது. எம்பெருமான் - குணங்களையும்
உலகங்களையும் உடையனாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவன்.
_____________________________________________________________
1. ஆவிர்ப்பாவம் - படைக்கப்படுகின்ற
காலத்தில் படைக்கப்படுதல் - திரோபாவம் -
மறைதல். ஜன்மம் - இடையிடையே தோன்றுதல். நாசம்
- அழிக்குங்காலத்தில்
அழிக்கப்படுதல்.
2. ‘திண்ணன் வீடு முதல்
முழுதுமாய் எண்ணின் ‘மீதியன்’ என்பதற்கு மூன்று வகையாகப்
பொருள் அருளிச் செய்கிறார். ‘இனி’
என்று தொடங்குவது இரண்டாவது பொருள்.
இரண்டாவது பொருளில்,
கொடுத்தலாகிய குணம் ஒன்றனையே கூறினாராயினும்,
உபலக்ஷணத்தால் மற்றைங் குணங்களையும் கொள்க.
‘ஈண்டு, உபலஷணத்தால் மற்றைக்
குணங்களையும் கொள்ள வேண்டுவது என்னை?’ எனின் - முன்றாவது
பொருளில்,
‘மோக்ஷம் முதலான உறுதிப் பொருள்களைக் கொடுக்கிற கொடையாகிய குணம்
ஒன்றனையே
கூறுவதாகக் கொண்டு’ என்று கூறுவதனால் என்க.
|