பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
163

    வி-கு : ‘பொருட்டாக’ ஈறு கெட்டது. ‘தொல்’ என்பது, ஈண்டு இயல்பினைக் குறித்தது. ‘கோகுகட்டு’ என்பதனை, ‘கோகு உகட்டு’ என்று பிரித்து, ‘அடைவு கேடு தலைமண்டையிட்டு’ என்று வியாக்கியாதா அருளிச்செய்யும் பொருள் நினைவில் இருத்தற்பாலது. உழலாதார் - வினையாலணையும் பெயர்.

    ஈடு : நாலாம் பாட்டு. ‘நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளையும் அடர்த்து அவளோடே கலந்த காதல் குணத்தை அநுசந்தித்து ஈடுபடாதவர்கள், ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே என்ன பிரயோஜனத்துக்காகப் பிறந்தார்கள்?’ என்கிறார்.

    வம்பு அவிழ் கோதைபொருட்டா - நறுநாற்றம் கமழாநின்றுள்ள மாலையைத் தரித்த மயிர் முடியையுடைய நப்பின்னைப்பிராட்டியின் நிமித்தமாக. வம்பு அவிழ் வாசையோடு மலர்ந்த. கோதை - மாலை; மயிர் முடிக்கு ஆகுபெயர். நப்பின்னைப் பிராட்டியை ஒப்பித்து நிறுத்தினார்கள் ஆயிற்று ‘இந்த இடபங்களை வென்றார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம்’ என்று. ஒப்பனையழகையும் மயிர் முடியையுங்கண்டவாறே தன்னைப் பேணாதே ‘தவாஸ்மி - உனக்காக இருக்கிறேன்’ என்று அவளுக்காகத் தன்னை ஓக்கினான் என்றபடி. மால் விடை - பெரிய இடபங்கள். வடிவில் பெருமை தன்னைக் கண்ட போதே பிற்காலிக்கும்படியாயிற்று இருப்பது; அதனால் ‘மால் விடை’ என்கிறார். ஏழும்-‘பெரியோர்களுக்குங்கூட நற்காரியங்களுக்குப் பல தடைகள் உண்டாகின்றன,’ என்று சொல்லுகிறபடியே, ஒன்று இரண்டு அன்றிக்கே, ஏழு விரோதிகள். அடர்த்த - பின்னர் அணையப் புகுகிறது அவள் தோள்களை ஆகையாலே 1கிரமப் பிராப்தி பற்றாமே ஒரு காலே ஊட்டியாக நெரித்தான் ஆயிற்று. செம்பவளம் திரள் வாயன் - விருப்பத்திற்குத் தடையாய் இருந்தவைகள் போகையாலே புன்முறுவல் செய்தபடி. அன்றியே, ‘அவை திருத்தோள்களுக்கு இரை போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி’ என்னுதல். சிரீதரன் - இவ்விடைகள் ஏழையும் வென்று வீர லக்ஷ்மியோடே நின்ற நிலை. அன்றி, ‘அவள்

___________________________________________________ 

1. கிரமப்பிராப்தி பற்றாமே - கி்ரமமாக அடைவோம் என்பதில்லாமல். ஊட்டி -
  கழுத்து; ‘கழுத்துகளைப் பிடித்து நெரித்தான்’ என்றபடி. ‘குரல் வளை’
  என்றும் கூறுவர்.