பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
198

    வி-கு : ‘முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும், முதலாவான் மூரிநீர் வண்ணன்’ என்பது பொய்கையார் திருவாக்கு. ‘மூவுருவாகிய தலை பிரி ஒருவனை’ என்பது பரிபாடல் (13 : 37) ‘மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ?’ என்றார் கம்பநாட்டாழ்வார். (கம்ப. ஆரண். கவந்.) ‘மேவரு ஞானா னந்த வெள்ளமாய் விதித்தோ னாதி, மூவரு மாகி அந்த மூவர்க்கும் முதல்வ னாகி' என்றார் வில்லிபுத்தூராழ்வார்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘உலக காரணனாதல் தாமரைக் கண்ணனாதல் முதலிய குணங்களைச் சொல்லி, ‘பற்றுங்கோள்’ என்னாநின்றீர்; அவை பரத்துவத்துக்கே உரியவையான இலக்கணங்களாம்; ஆன பின்பு, எங்களாலே அவனை அடையப் போமோ?’ என்ன, ‘அப்படிப்பட்டவன்தானே உங்களோடு ஒரே இனத்தவனாய்ச் சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான்? அங்கே பற்றுமின்,’ என்கிறார்.

    மூவராகிய மூர்த்தியை - மேல் பாசுரத்தில் சொல்லப்பட்ட சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சொல்லுகைக்காக இப்பாசுரத்திலும் ‘மூவராகிய மூர்த்தியை’ என்கிறார். முதல் மூவர்க்கும் முதல்வன்தன்னை - உலகத்திற்குக் காரணனாய் இருந்துள்ள தன்னோடு கூடின மூவர்க்கும் காரணனாய் உள்ளவனை. ‘பிரமனுக்கும் சிவனுக்கும் காரணன் ஆகிறான், தனக்குக் காரணன் ஆகையாவது என்?’ என்னில், தான் இவர்களுக்குக் காரணனாய் இருப்பது போன்று தனக்கு அவ்வருகு வேறொரு காரணம் இன்றியே இருத்தலைத் தெரிவித்தபடி. ‘ஆத்மேஸ்வரம் - தனக்குத் தானே தலைவன்’ என்பது உபநிடத வாக்கியம். 2இதனால், ‘மேற்கூறிய சாமாநாதிகரண்யம் சொரூபத்தால் அன்று; காரிய காரணம் பற்றி வந்தது,’ என்பதனைத் தெரிவித்தபடி. அன்றியே, இந்திரனையும் கூட்டி, ‘உலகிற்கு முதல்வராய் இருக்கிற பிரமன் ருத்ரன் இந்திரன் இவர்களுக்கும் காரணனாயுள்ளவனை’ என்னுதல். சர்வம் உள்ளன நீக்குவானை - 3‘வேதங்கள் கொள்ளை கொள்ளப்

___________________________________________________ 

1. மேற்பாசுரத்தில் பரத்துவத்தை அருளிச்செய்தவர், இப்பாசுரத்தில்
  அவதாரத்தை அருளிச்செய்வதன் நோக்கத்தை அருளிச்செய்கிறார், ‘உலக
  காரணனாதல்’ என்று தொடங்கி. ‘தென்னிலங்கை எரியெழச் செற்ற
  வில்லியை’ என்றதனை நோக்கிச் ‘சக்கரவர்த்தி திருமகனாய்’ என்கிறார்.

2. ‘இதனால்’ என்றது, ‘முதல்வன்’ என்றதனைக் குறித்தது. ஆக, ‘முதல்’
  என்றதற்கு இரண்டு பொருள்: ஒன்று, காரணன்; மற்றொன்று, தலைவன்.
  முதல்வன் - காரணன்.

3. ஸ்தோத்திரரத்நம். 13.