பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
273

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘அவனுடைய அகடிதகடநாசாமர்த்யத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையின் எல்லை நிலம் நான்,’ என்கிறார்.

    அடி ஆர்ந்த வையம் உண்டு - அமுதுசெய்ய, முன்பே 2அடி இட்ட படி அன்றோ இது? தன் படிக்குக் காற்கூறும் போராததை அன்றோ அமுது செய்தது? திருவடிக்கு அளவான பூமியை அமுது செய்து. ஆல் இலை 3அன்ன வசம் செய்யும் - அப்பொழுது தோன்றியது ஓர் ஆலந்தளிரிலே உணவுக்கு ஈடாக இடம் வலங்கொள்ளும். அமுது செய்த படி ஜீரணியாமல், வலக்கை கீழ்ப்பட ஆயிற்றுக் கிடப்பது. ‘வலக்கை கீழ்ப்படக் கிடப்பான் என்?’ எனின், தந்தாம் 4ஜீவனத்திற்குக் கேடு வாராமல் பாதுகாத்தல் எல்லார்க்கும் ஒக்குமே? கூழாட்படுகை அவனுக்கும் ஒத்திருக்கிறபடி. படி யாதும் இல் குழவிப் படி - ஒப்பு ஒன்றுமின்றியே இருக்கின்ற பிள்ளைத்தனத்தாலே. ‘யசோதையின் முலைப்பால் உண்ணும் பிள்ளையும் ஒப்பு அன்று வடதளசாயிக்கு’ என்பார், ‘படி யாதும் இல் குழவி’ என்கிறார். ‘தொட்டில்நின்றும் தரையிலே விழப் புகுகிறோம்’ என்று அஞ்ச அறியாத இளமையே அன்றோ அங்கு? ‘ஆல் இலையினின்றும்

_______________________________________________   

1. ‘ஆல் இலை அன்ன வசஞ் செய்யும்’ என்பது போன்றவைகளைக்
  கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. அடியிட்ட படி’ என்பதும், ‘தன் படிக்குக் காற்கூறும்’ என்பதும் சிலேடைகள்:
  அடியிட்ட படி - உத்யோகித்தபடி. படி - பூமி, பிரகாரம். காற்கூறு -
  காற்பாகம்: திருவடியின் அளவு.

3. ‘அன்ன வசஞ்செய்யும்’ என்றது, ‘உண்ட அன்னத்துக்குத் தகுதியாகச்
  செய்யுமவன்’ என்பதாம்; என்றது, ‘உண்ட உணவு அறாதபடி வலக்கை
  கீழதாகக் கண்வளர்பவன்’ என்றபடி. இவ்விடத்தில்,

  ‘தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்தபழஞ்
  சேமப் புவனம் செரிக்குமென் றே,சிவன் மாமுடிக்கு
  நாமப் புனல்தந்த பொற்றா ளரங்கர், நலஞ்சிறந்த
  வாமத் திருக்கர மேலாக வேகண் வளர்வதுவே.’

  என்ற திவ்வியகவியின் பாசுரத்தை நினைவு கூர்க.

4. ஜீவனம், சிலேடை : உணவு, பிராணன், ரசோக்தி, ‘கூழாட்படுகை’ என்று
  தொடங்கும் வாக்கியம். ‘கூழாட்பட்டு நின்றீர்களை’ என்பது
  திருப்பல்லாண்டு. கூழாட்படுகை - சேதநர்கட்குக் கூழின் நிமித்தம்
  அடிமைப்படுகை இயற்கை. ‘ஈசுவரனுக்குக் கூழை நோக்குகைக்காக
  அடிமைப்படுதல் இயற்கை,’ என்றபடி. கூழ் - உணவு. வடதளசாயி -
  ஆலிலையைப் படுக்கையாக உடையவன்.