|
311
311
சொன்னால் விரோதம்இது,
ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என்நாவில் இன்கவி
யான்ஒரு வர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாஎன்று வண்டு
முரல்திரு வேங்கடத்து
என்ஆனை என்அப்பன்,
எம்பெரு மான்உள னாகவே.
பொ-ரை : ‘நான் இந்த
நலத்தைச் சொன்னால் உங்களுக்கு விரோதமாகவே இருக்கும்; ஆயினும் சொல்லுவன் கேளுங்கள்: வண்டுகள்
தென்னா தென்னா என்று ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற என் யானையும் என்
அப்பனும் ஆய எம்பெருமான் உளனாய் இருக்க, என் நாவினின்றும் வருகின்ற இனிய கவிகளை யான்
ஒருவர்க்கும் கொடேன்,’ என்கிறார்.
வி-கு :
‘இது சொன்னால் விரோதம்’ என மாறுக. என் ஆனை - எனக்கு யானை போன்றவன். ‘உளனாக யான்
ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ எனக் கூட்டுக.
ஈடு : முதற்பாட்டில்,
1மனிதர்களைக் கவி பாடுகை உங்களுக்கு நன்மை அன்று என்று உபதேசம் செய்யப் புகுந்தவர்,
அவர்களுக்கு ருசி பிறக்கைக்காக, ‘நான் இருக்கிறபடி பார்த்தீர்கள் அன்றோ?’ என்று தம்முடைய
மதத்தை அருளிச்செய்கிறார்.
2இது
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன் - வேறு ஒரு பிரயோஜனத்தைக் கருதினவர்களாய்க் கவி
பாடுகிற உங்களைக் ‘கவி பாடாதே கொள்ளுங்கோள்’ என்று கூறுதல், உம்தம் பிரயோஜனத்தைத் தவிர்த்தலேயன்றோ?
‘நம் பிரயோஜனத்துக்கு இழவாக வார்த்தை சொல்லுகின்றானே!’ என்று விரோதமாய்த்
____________________________________________________
1. ‘நலத்தை உபதேசிக்கப்
புக்கவர், ‘யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’
என்று தம் படியைச் சொல்லுவான் என்?’ என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘மனிதர்களைக் கவி பாடுகை’ என்று தொடங்கி.
2. ‘சொன்னால்
விரோதம்’ என்பதற்கு மூன்று வகையாகக் கருத்து
அருளிச்செய்கிறார்: முதல் இரண்டு வகையிலும்
‘உங்களுக்கு விரோதம்’
என்பது பொருள்; என்றது, ‘மனிதர்களைக் கவி பாட வேண்டா என்றும்,
அடையத்தக்கவனான பகவானைத் துதி செய்யுங்கள் என்றும் நான் கூறுதல்
உங்களுக்கு விரோதமாக
இருக்கும்,’ என்றபடி. இவற்றுள், முதற்கருத்தை
‘வேறொரு பிரயோஜனத்தைக் கருதினவர்களாய்’ என்று
தொடங்கி
அருளிச்செய்கிறார். ‘ஆயிருக்கவும், சொல்லுகிறேன்’ என்றது, ‘பார்த்திருக்க
முடியாத
எல்லை இல்லாத கிருபையாலே சொல்லுகிறேன்,’ என்றபடி.
|