பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
334

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘உபகாரகரும் அன்றிக்கே, கவி பாடுகிறவர்களுக்குத் தாழ்வு உண்டாகும்படி இழிந்தவர்களுமாய் இருக்கின்றவர்களைக் கவி பாடாதே, எல்லா நற்குணங்களையும் உடையனுமாய் விரும்புவன எல்லாவற்றையும் கொடுக்கின்றவனுமான சர்வேசுவரனைக் கவி பாட வாருங்கள்,’ என்கிறார்.

    கொள்ளும் பயன் இல்லை - 2‘பிறரைக் கவி பாட இழிகின்றது அவர்கள் உத்தேஸ்யராய் அன்றே? ஒரு பிரயோஜனத்துக்காகவே; அது இல்லை’ என்கிறார். என்றது, ‘நீங்களும் இசையவே கவிபாடுதலே பிரயோஜனம் அன்றே? பிரயோஜனத்தை விரும்புகின்றவர்களாகவே கவி பாடுகிறது; அது இல்லை என்னாவே, மீளுவர் என்று பார்த்து முந்துற முன்னம் ‘இல்லை’ என்கிறார்’ என்றபடி. நெஞ்சு கன்றக் கவி பாடுகிற இதற்கு பெரிய இலாபம்காணும் ‘கொள்ளும் பயன் இல்லை’ என்கை. என்றது, ‘கொள்ளக் கூடியது ஒரு பிரயோஜனம் இல்லை என்கை’ என்றபடி. ஆக, உங்களுக்காக ஒரு பிரயோஜனம் இல்லையாய் இருந்தது.

    ‘தங்களுக்கு ஒரு பயன் இல்லையேயாகிலும், பிறருடைய நன்மைக்காகவும் செய்யத் தொடங்கலாம் அன்றே? அதுதான் உண்டோ?’ எனின், ‘குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை’ என்கிறார்; ‘குப்பையைக் கிளறினாற்போலே இருக்கின்ற செல்வத்தை’ என்றது, ‘மறைந்து கிடக்கிற குற்றங்களை வெளியிடுகையாலே அவர்களுக்குத் தாழ்வினை விளைவிக்கக் கூடியதாமித்தனை. குப்பையைக் கிளறினால் உள் மறைந்து கிடக்கிற கறைச்சீரை முதலாக உள்ளவை அன்றோ வெளிப்படுவன? 3‘ஆகையால்,

____________________________________________________

1. ‘கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை; கொள்ளக்
  குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும்’ என்பனவற்றைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘முதல் முதலில் ‘கொள்ளும் பயன் இல்லை’ என்று அருளிச்செய்யும்
  கருத்து என்?’ என்னும் வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பிறரைக்
  கவி பாட’ என்று தொடங்கி. அதனை விவரிக்கிறார், ‘நீங்களும் இசையவே’
  என்று தொடங்கி. வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘நெஞ்சு கன்றக் கவி
  பாடுகிற’ என்று தொடங்கும் வாக்கியம்.

3. ‘குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை’ என்றது, இருவர்க்கும் தாழ்வாம்
  என்றதனை விளக்க வந்தது என்கிறார், ‘ஆகையால்’ என்று தொடங்கி.
  மேலே ‘கறைச்சீரை’ என்றது, அழுக்குக்கந்தையை.