பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
337

செ

சொல்லுகிறேன். மணி வண்ணன் - கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று வடிவழகு. உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி பாடினாலும் இவனையே பாட வேண்டும்; கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்? மணி வண்ணன்தன்னைக் கவி சொல்ல வம்மின் - 2நான் சொல்லுகிற படியை உடையவனைக் கவி பாட வாருங்கோள். ‘பிற்காலியாதே கடுகப் புகுரப் பாருங்கோள்’ என்பார், ‘வம்மின்’ என்கிறார்.

(5)

316

    வம்மின் புலவீர்!நும் மெய்வருத்திக் கைசெய்து உய்ம்மினோ!
    இம்மன் உலகில் செல்வர்இப் போதுஇல்லை நோக்கினோம்;
    நும்இன் கவிகொண்டு நும்நும்இட் டாதெய்வம் ஏத்தினால்
    செம்மின் சுடர்முடி என்திரு மாலுக்குச் சேருமே.

   
பொ-ரை : ‘புலவீர்! வாருங்கோள்; உங்களுடைய சரீரத்தை வருத்திக் கைத்தொழில் செய்து உஜ்ஜீவியுங்கோள்; நிலை பெற்ற இந்த உலகத்தில் செல்வமுடையார் இலர்; இப்போது நோக்கினோம்; உங்களுடைய இனிய கவிகளைக்கொண்டு உங்கட்கு இஷ்டமான தெய்வத்தைத் துதித்தால், அக்கவிகள் மிகச்சிறந்த ஒளி பொருந்திய முடியையுடைய என் திருமகள் கேள்வனுக்குச் சேரும்,’ என்கிறார்.

    வி-கு :
முதலடியில், ஆழ்வார் அருளிச்செய்யும் உபாயம் ஊன்றிக் கவனித்தற்குரியது. மன் - நிலைபேறு. வியாக்கியானம் காண்க.

    ஈடு :
ஆறாம் பாட்டு. 3‘ஜீவனத்தின்பொருட்டு மனிதர்களைக் கவி பாடுகிறோம்’ என்ன, ‘புல்லரைக் கவிபாடி வாழ்வதிலும் உடம்பு நோவப் பணி செய்து வாழ்தல் நன்று,’ என்கிறார்.

____________________________________________________

1. கொள்ளும் பயன் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று
  வடிவழகு; என்னை?’ எனின் ‘உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல்
  விழாநின்றதன்றோ புறம்பு?’ எனவும், ‘செல்வம் இன்றியே ஒழிந்தாலும்
  விடவொண்ணாதபடி ஆயிற்று வடிவழகு; ஆதலால், வடிவழகு கண்டு கவி
  பாடினாலும் இவனையே பாட வேண்டும்; ‘என்னை?’ எனின், ‘கைக்கூலி
  கொடுத்து விரும்பாநின்றதன்றோ உருவத்தின் தோற்றங்களையும்?’ எனவும்
  பிரித்துக் கூட்டிச் சில சொற்பெய்து பொருள் காண்க.

2. ‘நான் சொல்லுகிற படி’ என்பது, சிலேடை: திருமேனியும், பிரகாரமும்.

3. ‘நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ’ என்றதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.