பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
342

New Page 1

போலேயாய், ஒரு பாட்டில் அடங்காதபடி இருத்தல் அன்றியே, நினைத்தபடி பாசுரமிட்டுக் கவி பாடலாம்படி பல பல திருநாமங்களை உண்டாக்கி வைத்த மஹோபகாரகனை. ஓர் ஒன்றே கவி பாடுகைக்கு விஷயம் போரும்படி இரண்டாவது வேண்டாததாய் இருத்தலின், ‘ஓர் ஆயிரம்’ என்கிறார். அவற்றை இவர்க்குப் பிரகாசிப்பித்த உபகாரகன் ஆதலின், ‘பிரானை’ என்கிறார். இவ்விஷயத்தை ஆயிற்றுக் கவி பாடுகிறது. அல்லால் மற்று யால் கிலேன் - இவனை ஒழிய வேறு ஒருவரைக் கவி பாட ஆற்றலன் ஆகின்றிலேன்.

    ‘எவைதாம் நீர் மாட்டாமல் ஒழிகிறவை?’ என்ன, கை மாரி அனைய - கொடுக்கைக்கு முதல் இன்றிக்கே இருக்கிறான் ஒருவனை, கொடையில் மேகத்தை ஒக்கும் என்கை. கைம்மாறு கருதாது கொடுக்கையும், கொடுக்கப் பெறாதபோது உடம்பு வெளுக்கையும் 1முதலானவைகள் மேகத்தின் தன்மையாம். கை என்றது, கொடை. திண் தோள் மால் வரை ஒக்கும் - கொடையை நினைத்துத் தேம்புகிற தோளைக் குறித்து, ‘கொடுத்துப் பணைத்திருக்கிறது’ என்றும், ‘இத்தோள் நிழலிலே அன்றோ உலகம் அடங்க வாழ்ந்து கிடக்கிறது?’ என்றும். பாரில் ஓர் பற்றையை - பூமியிலுள்ளார் சிலராய், பற்றையாய் இருக்கின்றவர்களை. என்றது, ‘முளைத்து எழுந்து தீந்து போவன சில சிறு தூறுகள் உள அன்றே? அப்படியே, பிறந்தது தொடங்கி இருக்கின்ற வரையிலும் தனக்கு உறுப்பாதல் பிறர்க்கு உறுப்பாதல் செய்யாதவர்கள்’ என்பதனைக் குறித்தபடி. 2‘போக பூமியில் சிலராகில் பொருந்தினும் பொருந்தும்’ என்பார், ‘பாரில் ஓர் பற்றை’ என்கிறார். 3அன்றிக்கே, பாரில் ‘பற்றையை’ என்பதற்கு, பார் என்பது,

____________________________________________________

1. ‘முதலானவைகள்’ என்றதனால், கேளாமலே கொடுத்தல், தண்ணீர் என்றும்
  நிலம் என்றும் வேறுபாடு இல்லாமலே கொடுத்தல் முதலியனவற்றைக்
  கொள்க. ‘கொடுக்கப்பெறாத போது உடம்பு வெளுக்கை’ என்ற விசேடவுரை,
  மற்றைத் தமிழ் நூல் உரைகளில் காணப்படாதது.

2. போகபூமி - சுவர்க்கம் முதலான உலகங்கள்.

3. ‘பாரில் ஓர் பற்றை’ என்பதற்கு, வியாக்கியாதா அருளிச்செய்யும் பொருள்,
  பூலோகத்தில் தூறு போன்று பயன் அற்றவனை என்பது. பார் - பூமி; இல் -
  ஏழாம் வேற்றுமையுருபு. பற்றை - தூறு; புல். பிறர் உரைக்கும் பொருள், பார்
  இல் - இருத்தற்கு வீடும் இல்லாத, பற்றையை - உலோபியை என்பது.