பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
154

    வி-கு : ‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்து ஆற்றல் மிக்கு ஆளும் வீவில்சீர் அம்மான்’ என்க. ‘வீ’ என்பதற்கு ‘அழிதல்’ என்பது பொருள். ‘போற்றி - பரிகாரம்’ என்பர் நச்சினார்க்கினியர். ‘போற்றி -பாதுகாத்தருள்க; இகரவீற்று வியங்கோள்’ என்பர் அடியார்க்கு நல்லார். ‘இனி எழுமையும் என்ன குறை?’ என மாறுக. எழுமையும் - ‘எப்பொழுதும்’ என்னலுமாம்.

    இத்திருவாய்மொழி கலித்துறை என்னும் பாவகையில் அடங்கும்.

    ஈடு : முதற்பாட்டு. 1‘சர்வேசுவரனாய் வைத்து அடியார்களைக் காப்பாற்றுவதற்காக மனிதர் கதியில் வந்து அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணனைக் கவி பாடப் பெற்ற எனக்கு நாளும் ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

    வீற்றிருந்து - வீற்று என்று வேறுபாடாய், தன் 2வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து. 3ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான் இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில், ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ? ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க. 4எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும், எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாய்

_____________________________________________________

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘வெம்
  மா பிளந்தான்றன்னை’ என்றதனை நோக்கி, ‘ஸ்ரீ கிருஷ்ணனை’ என்கிறார்.

2. ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, உயர்வினாலே வந்த வேறுபாடு என்று கூறத்
  திருவுள்ளம் பற்றி, அவ்வுயர்வுதான் எங்கும் பரந்திருத்தல், எல்லாப்
  பொருள்கட்கும் சேஷியாயிருத்தல், எல்லாரையும் ஏவுகின்றவனாயிருத்தல்
  ஆக மூன்று வகையாய் இருத்தலின், அம் மூன்று வகையான வேறுபாடுகளும்
  தோன்ற ‘வேறுபாடு அடங்கலும்’ என்கிறார்.

3. ‘வேறுபாடு எவ்வகையாலே?’ என்ன, அதனை அருளிச்செய்கிறார், ‘ஈண்டு,
  வேறுபாடு என்றது’ என்று தொடங்கி.

4. ‘எல்லா ஆத்துமாக்களும் ஈசுவரனோடு ஞானத்தாலே ஒரே தன்மையனவாய்
  ஒத்து இருக்க, வேறுபாடு சொல்லும்படி யாங்ஙனம்?’ என்கிற சங்கையையும்
  நீக்காநின்றுகொண்டு, மேலே ‘வேறுபாடு அடங்கலும்’ என்றதில் சொல்ல
  வேண்டுமென்று விரும்பிய தன்மை விசேஷங்களையும் காட்டுகிறார், ‘எல்லா
  ஆத்துமாக்களுக்கும்’ என்று தொடங்கி.