பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
214

நீங்கள் அறிய மாட்டுகின்றிலீர்கள்,’ என்றபடி. 1தாய்மார் ஆகையாலே சிறப்பித்து வார்த்தை சொல்ல வேண்டுமே அன்றோ? ஆதலால், ‘திசைக்கின்றதே’ என்கிறாள். இவள் நோய் காரணமாக அறிவு கெடுவதே 2நாம்! ‘நாங்கள் அறிந்திலோமாகில், இதற்குக் காரணம் அறிந்தவளாய் இருக்கிற நீதான் பின்னைச்சொல்லிக்காணாய்,’ என்ன, சொல்லுகிறாள் மேல் :

    இது மிக்க பெருந்தெய்வம் - ‘கம்பீரமான தன்மையையுடையவன், மேலான தெய்வம்’ என்றும், 3‘வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நோய்’ என்றும் சொல்லுகிறபடியே, சர்வேசுவரன் அடியாய் வந்த சிறப்பு வாய்ந்த நோய் இது; இவள் நோய்க்கும், இவள் நோய்க்குக் காரணன் ஆனவனுக்கும் உண்டான வேற்றுமை இன்மையை நினைத்து, ‘இது மிக்க பெருந்தெய்வம்’ என்று 4நோய்தன்னையே அவனாகச் சொல்லுகிறாள். இசைப்பு

_____________________________________________________

1. ‘‘திசைக்கின்றீர்கள்’ என்னாது, ‘திசைக்கின்றதே’ என்கிறது என்?’ என்ன,
  அதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘தாய்மாராகையாலே’ என்று தொடங்கி.
  ஆக, ‘திசைக்கின்றதே’ என்பது, பூஜ்ய வார்த்தை என்றபடி. இவ்வாறு
  பேசுதல், வைணவப் பெருமக்களிடையே இன்றும் பெருவழக்காய் உள்ளதை
  நாம் அறிதல் தகும். ‘ஸ்வாமி அருளிச்செய்கிறதே’ என்பது
  போன்றவைகளைக் காண்க.

2. ‘நாம்’ என்பதற்கு, ஈண்டு ‘நீங்கள்’ என்பது பொருள்.

  ‘செங்கயல்போல் கருநெடுங்கண் தேமருதா மரையுறையும்
  நங்கையிவ ரெனநெருநல் நடந்தவரோ நாமென்ன’

(கம்ப. சூர்ப். 119)

  ‘நாமரை யாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே’

(திருக்கோ. 164)

  ‘தாவா விருப்பொடு கன்றியாத்துழிச் செல்லும்
  ஆபோற் படர்தக நாம்’

(கலித். மரு. 16.)

  என்ற இடங்களில் ‘நாம்’ என்பது, முன்னிலைப்பொருளில் வந்திருத்தல்
  காண்க. அன்றி,

  'நாம்’ என்பதனை உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாகக் கோடலுமாம்.

3. திருவிருத்தம், 53.

4.
 ‘நோய்தன்னையே அவனாகச் சொல்லுகிறாள்’ என்றது, காரிய காரண
  உபசாரம்;
பெருந்தெய்வம், காரணம்; நோய், காரியம். இங்குக் காரியத்தைக்
  காரணமாக உபசரித்திருத்தல் காண்க.