பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
259

    காலந்தோறும் - 1‘ஒரு காலத்திலே இதனையும் சொல்லி, வேறு ஒரு காலத்திலே ‘வேறு ஒரு பொருள் வணங்கத் தக்கது’ என்று அதிலே கால் வாங்குகிறேனோ?’ என்பார், ‘காலந்தோறும்’ என்கிறார். யான் இருந்து - படுவன எல்லாம் பட்டும் நூறே பிராயமாக இருக்கவேண்டுமோ? 2குணங்களால் மேம்பட்ட ஒருவனைப் பிரிந்தால் முடியவொட்டாது, ‘இன்னமும் காணலாமோ?’ என்னும் நசை. கை தலை பூசல் இட்டால் - 3‘தலையிலே கை வைத்தால் மெய் காட்ட வேண்டாவோ? அன்றிக்கே, ‘தலையில் கை வைத்துக் கூப்பிட்டால்’ என்னுதல்; அன்றிக்கே, ‘கையும் தலையுமான பூசல் மாறாதே ஒருபடியே இருந்தால்’ என்னுதல். கோலம் மேனி - 4ஆசைப்பட்டார்க்கு அன்றாகில், அவ்வடிவு யார்க்கு? ‘உனது திருமேனியும் உனக்காக அன்று; பத்தர்களுக்காகவே,’ என்றே

_____________________________________________________

1. ‘போக்கியதையாலே விட முடியாமையைத் தெரிவிக்கிறார், ‘என்று என்று’
  என்ற அடுக்குத்தொடரால்’ என்றார் மேல். இங்கு, அவனே சாதனமாக
  இருப்பதனாலும் விட முடியாமையைத் தெரிவிக்கிறார் ‘காலந்தோறும்
  என்றதனால்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றி, அதனை விளக்குகிறார், ‘ஒரு
  காலத்திலே’ என்று தொடங்கி. அயன சப்தத்தினுடைய
  கரணவியுத்பத்தியினாலே உபாயத்வமாகிய பொருளும் கிடைக்கும்.

2. ‘இருந்து படுகிறது என்? முடிந்து பிழைக்க ஒண்ணாதோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘குணங்களால்’ என்று தொடங்கி.

3. ‘கைதலை பூசலிட்டால்’ என்பதற்கு மூன்று வகையாகக் கருத்து
  அருளிச்செய்கிறார்: முதல் கருத்து, ‘பூசல்’ என்று பொருந்துதலாய்,
  தலையிலே கை பொருந்தினால்; அதாவது, ‘அஞ்சலி செய்தால்’ என்பது.
  இதனை அருளிச்செய்கிறார், ‘தலையிலே’ என்று தொடங்கி. ‘மெய் காட்ட
  வேண்டாவோ?’ என்றது, சிலேடை: ‘கோல மேனி’ என்றதிலே நோக்கு.
  இரண்டாவது கருத்து, ‘தலையிலே கையை வைத்துக் கூப்பிட்டால்’ என்பது;
  பூசலிடல் - கூப்பிடுதல். மூன்றாவது கருத்து, ‘காலந்தோறும் இருந்து அஞ்சலி
  இட்டால்’ என்பது; அதாவது, ‘இத்தலையில் அஞ்சலி மாறாமல் ஒருபடியே
  இருந்தால்’ என்றபடி. பூசல் பொருந்துதல். 

4. ‘கை தலை பூசலிட்டால் கோல மேனி காண வாராய்’ என்று கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘ஆசைப்பட்டார்க்கு’ என்று தொடங்கி. ‘உனது
  திருமேனியும்’ என்று தொடங்கும் பொருளையுடைய சுலோகம், ஜிதந்தா.