பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
266

New Page 1

வேண்டும்; அனுபவிக்கப்படாத கர்மங்கள் பல கோடி கற்ப காலங்கள் கழிந்தாலும் நாசத்தை அடையமாட்டா, என்கிற வசனமும் என் அளவிலே பொய்யோ? அனுபவித்தாலும் குறையாதிருக்க வேண்டுமோ? ‘ஆயின், அனுபவித்தாரோ?’ என்னில், சிறிது நேரம் முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தார் அன்றோ? ‘செய்வினை’ என்று ஒன்றாய் இருந்ததோ? எத்தனை கோடி பாவங்களைச் செய்தேனோ!’ என்பார், ‘தீவினைகள் எத்தனை செய்தனன் கொல்?’ என்கிறார். 1தாவி வையம் கொண்ட எந்தாய் - அரிய செயல்களையும் வருத்தம் அறச் செய்ய வல்லவன் அன்றோ? அது செய்யுமிடத்தில் வரையாதே எல்லாரையும் காக்குமவன் அன்றோ? அவன் இவற்றைக் காப்பதற்கு அடியிட்டான்; அச்செயலிலே இவரும் தோற்று அவனுக்கு உரியவராய் ‘எந்தாய்!’ என்கிறார். தாமோதரா - 2‘நீ எங்களுக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்’ என்று சிலர் இரக்க, அவர்களுக்குக் கட்டவும் அடிக்கவும் ஆம்படி உன்னைப் பரதந்திரன் ஆக்கினவன் அன்றோ? உன் வயிறு வாழாமல் அன்றோ இப்படிக் களவுகண்டு கட்டுண்டு அடி உண்டது?

    என்று என்று - இதனை ஒருகால் சொல்லி, பின்பு வேறு ஒன்றனைச் சொல்லுமவர் அன்றே! கூவிக் கூவி - இத்தகைய பெருஞ்செயல்களைச் சொல்லிக் கூப்பிட்டுக் கூப்பிட்டு. நெஞ்சு உருகி - முந்துறக் கூவுகிற இது பிற்படக் கூவுமதனை விருத்தி செய்யும்படி கூவுகிற தம் மிடற்று ஓசை செவிவழியே புக்கு, நெஞ்சமானது நீர்ப்பண்டமாய்

_____________________________________________________

1. ‘தீவினைகள் மிகுதியாய் இருந்தால், நம்மைச் செய்யச் சொல்லுகிறது என்?’
  என்ன, ‘தாவி வையம் கொண்ட எந்தாய்’ என்கிறார். ‘தாவி’ என்றதற்கு
  பாவம், ‘அரிய செயல்களையும்’ என்று தொடங்கும் வாக்கியம். ‘வையம்’
  என்றதற்கு பாவம், ‘அது செய்யுமிடத்தில்’ என்று தொடங்கும் வாக்கியம்.
  மேலதனோடு கூட்டி ரசோக்தியாக ‘எந்தாய்’ என்றதற்கு பாவம், ‘அவன்
  இவற்றை’ என்று தொடங்கும் வாக்கியம்.

2. ‘தாமோதரா’ என்ற சப்த ஸ்வாரஸ்யத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘நீதி’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார். ‘வாழாமல் அன்றோ’ என்றது, ‘உனக்காகவோ
  செய்தாய், பிறர் பொருட்டாகவன்றோ செய்தாய்?’ என்கிறார் என்றபடி.