பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
267

உ

உருகும் ஆயிற்று. கண் பனிசோர நின்றால் - உருகின மனத்திற்குப் போக்குக் கண்டு விடுமாறு போலே கண்ணநீர் பெருக்கு எடுக்கும்படி நின்றால். பாவி நீ என்று ஒன்று சொல்லாய் - ‘இந்திரனுக்கு உதவினோம், யசோதை, முதலானவர்கட்கு உதவினோம்,’ என்றதனை நினைத்து நசை பண்ணுகிறது என்? ‘இந்திரன் சத்துவகுணத்தையுடையவன்; யசோதை தாய்; நீ பாவி’ என்று ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ? ‘இந்திரனைச் சத்துவகுணத்தை உடையவன் என்னலாமோ?’ எனின், ‘தேவர்களையும் அசுரர்களையும் வேறுபடுத்திப் பார்க்கும் வகையில் அவனையும் சத்துவ குணத்தையுடையவன் என்னலாமே அன்றோ? நான் ஆசையற்றவன் ஆகும்படி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்’ என்பார், ‘நீ பாவி’ என்று சொல்லாய் என்கிறார்.

    ‘‘நீ பாக்கியவான்’ என்னவுமாம். ‘பாக்கிய ஹீநன்’ என்னவுமாம்; அதில் அர்த்தங்கொண்டு காரியம் இல்லை; உன் மிடற்றோசை கேட்குமித்தனையே எனக்கு வேண்டுவது,’ என்பார், ‘ஒன்று சொல்லாய்’ என்கிறார்.

    ஆனால், அங்ஙனம் சொல்லுமிடத்து நிர்ப்பந்தம் ஒன்று உண்டு; ‘என்னை?’ எனின், அதனைச் சொல்லுகிறார் மேல்: பாவியேன் காண வந்து -‘என் கண்களுக்கு இலக்காம்படி வந்து சொல்ல வேண்டும்; நாடு முழுதும் உண்டு உடுத்துத் திரியாநிற்க, இப்படிக் கேளாவிடில் உய்யாதபடி பாவத்தைச் செய்தேன்,’ என்பார், தம்மைப் ‘பாவியேன்’ என்கிறார். ‘நெஞ்சிலே மறைந்து நின்று சொல்லிலும் ஆமே அன்றோ? அத்தால் போராது’ என்பார், ‘காண வந்து’ என்கிறார். ‘சொல்லாய், காண,’ என்கிறார்; இவற்றால், இவருடைய 1ஐம்பொறி இன்பங்களின் ஈடுபாடு இருக்கிறபடி. ‘சொல்ல மாட்டுகின்றிலை’ ஆதலால், ‘ஈவிலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்!’ எனக் கூட்டுக. 2இனி, ‘சொல்லாய்’ என்பதற்குச் சொல்ல வேண்டும் என்று பொருள் கூறலுமாம்.

(3)

_____________________________________________________

1. ‘சொல்லாய்’ என்கையாலே, செவி. ‘காண வந்து’ என்கையாலே, கண்.

2. ‘சொல்லாய்’ என்பதற்கு இரு வகையான பொருள் அருளிச்செய்கிறார்; முதல்
  வகை, மறைவினை. இரண்டாவது வகை, விதி வினை.