பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
270

ம

மிளிர’ என்னுதல். அன்றிக்கே, ‘திருகண்கள் விளங்க’ என்னுதல். நின்றருளாய் - என் கண் வட்டத்திலே நிற்க வேண்டும். என்று என்று - 1‘நான் உனக்குக் கொடுக்கிறேன், நீ எனக்குக் கொடு’ என்னுமவர்களே அன்றோ ஒருகால் சொல்லுவார்கள்?’ என்றது, அவன் கண்வட்டத்திலே வந்தால், இவன் போவதற்கு முன்னர்ப் பிரயோஜனத்திற்கு மடி ஏற்போம் என்பவர்களைத் தெரிவித்தபடி. நாணம் இல்லாச் சிறுதகையேன் - என்னுடைய முன்னைய ஒழுக்கத்தை நினைக்கமாட்டாத நாணம் இல்லாதவனும், மிகச்சிறியனுமான நான். சிறுதகையேன் - சிறிய ஞானத்தன். பிரமன் முதலானோர்களும் நித்திய சூரிகளுடைய கோடியிலேயாம்படி இவர் தம்மைச் சிறுக நினைத்திருக்கிறார் ஆதலின், ‘சிறுதகையேன்’ என்கிறார். இதனால், ‘யார் சொல்லும் வார்த்தையை யார் சொல்லுவது?’ என்கிறார்.

    நான் இங்கு அலற்றுவது என் - அவனுக்கு அடியிட ஒண்ணாத நிலத்திலே இருந்து கூப்பிடுகிற இதற்கு என்ன பிரயோசனம் உண்டு? பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனை - ‘பூமியில் கால் இடாதவர்களாலேதான் காணப்போமோ?’ என்பார், ‘வானோர்’ என்கிறார். 2பிரமன் முதலானோர்கட்கும் உபாசிக்குந்தொழில் உண்டு; ஆதலின், ‘பேணி’ என்கிறார். பேணுதல் - ஆசைப்படுதல்; அதனாலே, உபாசனத்தைச் சொல்லுகிறது. 3‘உபாசனத்திற்கு வேண்டிய சாதனங்கள் உண்டு; ஆகையாலே, மனிதர்களுக்கு மேலேயுள்ள தேவர்களுக்கும் உபாசனத்தில் அதிகாரம் உண்டு,’ என்பது சூத்திரம்.

    ஆக, பேணி வானோர் காண மாட்டாப் பீடு உண்டு. பீடு - பெருமை; ‘அதனையுடைய சர்வேசுவரனை, நாணமில்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்?’ என்கிறார் என்றபடி.

(4)

_____________________________________________________

1. ‘என்று என்று’ என்ற அடுக்கிற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘நான்’ என்று
  தொடங்கி. அவன்  - சர்வேசுவரன.்

2. உத்தரமீமாம்ஸை, சூத். 1. 3 : 25.

3. ‘ஆரா தனஞ்செய்து கண்டன்நின் கீர்த்தி அறைவன்,திரு
  ஆரா தனம்செய்வன் வேதாஎன் றால்,அடி யேன்புகழ்கைக்கு
  ஆரா தனஞ்செய்ய போதாந் திருமக ளாக!பல்பூண்
  ஆரா! தனஞ்செயன் பாகா! அரங்கத் தமர்ந்தவனே!

  என்றார் திவ்விய கவியும்.