பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
71

New Page 1

    மெலியும் நோய் தீர்க்கும் - 1மெலியும்’ என்று தாயார் கைவாங்கினாள்; 2‘பெற்றார் பெற்றொழிந்தார்’ என்கிற பாசுரப்படியே, பின்னையும் உடையவன் கைவிடானே? ஆதலின், ‘மெலியும் நோய் தீர்க்கும்’ என்கிறது. நம் கண்ணன் -இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான் என்னும் பிரமாண பிரசித்தியைப்பற்ற, ‘நம் கண்ணன்’ என்கிறது. 3‘கண்ணபிரான் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்,’ என்பது ஸ்ரீபாகவதம். கண்ணன் கழல்கள்மேல் - இப்படிச் சரீரம் மெலிவதற்கு அடியான விரக வியசனத்தைப் போக்கும் அடியார்கட்குச் சுலபனான ஸ்ரீகிருஷ்ணன் திருவடிகள் விஷயமாக. மலி புகழ் - ‘தேச காலங்களால் கை கழிந்த அவன் படிகளையும் இப்போதே பெற வேண்டும்’ என்று விடாய்க்கும்படி பகவத்விஷயத்திலே விடாய்க்கையால் வந்த புகழே அன்றோ? ஆதலின், ‘மலிபுகழ்’ என்கிறது. வண் குருகூர்ச் சடகோபன் சொல் - இப்படிப்பட்ட புகழையுடைய ஆழ்வார் அருளிச்செய்த. ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் - இப்படி இவரை விடாய்ப்பித்தவன் அவ்விடாய் போன இடம் தெரியாதபடி நீக்க வல்லன் என்கிற கல்யாணகுணங்களை விளக்கமாகச் சொல்லுகிற இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள்.

_____________________________________________________

1. ‘மெலியும்’ என்ற பின்னர், தாயார் வார்த்தை இல்லாமையாலே
  கைவாங்கினமை சித்தம்.

2. பெரிய திருமொழி. 8. 9 : 7.

  ‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின்று அடியேனுக்கு
  உற்றானாய் வளர்த்துஎன் னுயிராகி நின்றானை
  முற்றா மாமதிகோள் விடுத்தானை எம்மானை
  எத்தால் யான்மறக்கேன்? இதுசொல்என் ஏழைநெஞ்சே!’

  என்பது அத்திருப்பாசுரம்.

      உடையவன் - சுவாமி.

3. ‘புன்முறுவலோடு கூடின தாமரை போன்ற
  திருமுகமண்டலத்தையுடையவனாயும் பீதாம்பரத்தைத் தரித்தவனாயும்
  அணிந்த புஷ்பமாலையை உடையவனாயும் மன்மதனுக்கும் மன்மதனாயும்
  இருக்கிற கண்ணன் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து
  தோன்றினான்,’ என்பது ஸ்ரீ பாகவதம், 10.