New Page 1
பொ-ரை :
கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடைய நப்பின்னைப்பிராட்டி காரணமாக இடபங்களின் கழுத்தை
முரித்தாய்! மதிலால் சூழப்பட்ட இலங்கை நகர்க்கு அரசனான இராவணன் அழியும்படி வில்லை வளைத்தாய்!
சிறந்த நல்ல குவலயாபீடம் என்னும் யானையின் தந்தங்களை முரித்தாய்! பூக்களை விட்டு அகலாத
தண்ணீரைத் தூவி அவ்வக்காலத்தில் வணங்குதல் செய்திலேன் ஆயினும், பூவைப் பூவினது நிறத்தையுடைய
நினது திருமேனிக்குப் பூசுகின்ற சாந்து என் நெஞ்சமே ஆகும்.
வி-கு :
‘நீர் தூவி வணங்கேனேலும் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம்,’ என்க. ‘நீர் வீயாப் பூவை’
என மாறுக. வீதல் - நீங்குதல்; வீயா -நீங்காத. பூவை என்பதில் ‘ஐ’ இரண்டாம் வேற்றுமை யுருபு.
ஆக, நீரை விட்டு அகலாத பூ, ‘நீர்ப்பூ’ என்றபடி. அன்றிக்கே, வீயாப் பூவை - ‘உலராத மலர்களை’
என்னலுமாம். நான்காம் அடியில் ‘பூவை’ என்பதே சொல்; ‘காயாம் பூ’ என்பது பொருள். வீ - மலர்.
‘ஆகும் மேனி’ என்க.
ஈடு : முதற்பாட்டில்,
‘நப்பின்னைப் பிராட்டி, ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் தொடக்கமானார் உனக்குத் தேவிமார்களாய்
இருக்க. நீ அவர்கள் பக்கலிலே இருக்கும் இருப்பை என் பக்கலிலே இருக்கும்படி என் இருப்பே உனக்கு
எல்லாமாய்விட்டது,’ என்கிறார் ஆதல்; அன்றிக்கே, ‘அடியார்களுடைய பகைவர்களை அழிக்கிற இடங்களில்
அந்த அந்தச் சமயங்களில் வந்து முகங்காட்டி அடிமை செய்யப் பெற்றிலேன் நான்; இங்ஙனே
இருக்கவும், என் மனத்தினையே இனிய பொருளாகக் கொள்வதே!’ என்கிறார் ஆதல்.
கோவை
வாயாள்பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் - 2‘தன்னைப் பேணாதே அவனுக்கு இவ்வெருதுகளின்
_____________________________________________________
1. இப்பாசுரத்திற்கு இரண்டு
வகையாக அவதாரிகை அருளிச்செய்கிறார். முதல்
இரண்டடிகளையும் நான்காமடியையும் நோக்கியது, முதல்
அவதாரிகை. பின்
இரண்டு அடிகளையும் நோக்கியது, இரண்டாவது அவதாரிகை. அன்றிக்கே,
‘சர்வேசுவரனுக்குத் தம் பக்கல் உண்டான காதற்குணத்தைச் சொல்லுகிற
இவ்விடத்திலே பிராட்டியார்க்கு
உதவி செய்தமையையும், ‘போதால்
வணங்கேனேலும்’ என்று தன் தன்மையையும் சொல்லுவான் என்?’ என்னும்
வினாவைத் திருவுள்ளம் பற்றி, இரண்டு அவதாரிகைகளையும்
அருளிச்செய்கிறார் என்னலுமாம்.
2. ‘கோவை
வாயாள்’ என்று விசேடித்ததற்கு மூன்று வகையான கருத்து
அருளிச்செய்கிறார்: முதலாவது, இயற்கை அழகு;
இரண்டாவது,
அலங்காரத்தினால் உண்டான அழகு; மூன்றாவது, புன்முறுவலால் உண்டான
அழகு. இம்மூன்றனையும்
முறையே அருளிச்செய்கிறார், ‘தன்னைப்
பேணாதே’ என்று தொடங்கி.
|