பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
114

நீராகப் பாய்ச்சி. 1எருவாவது, அடியிலே ஒருகாலே இட்டுவிடுவதே அன்றோ, நீர் மாறாமல் பாய்ச்ச வேணுமே; ஊரார் ஒருகால் சொல்லிவிடுவர்களித்தனையே, தாயார் வீட்டுக்குள்ளே இருந்து எப்போதும் ஒரே தன்மையாக ஹிதம் சொல்லா நிற்குமே அன்றோ; அதனால், அன்னை சொல்லை ‘நீர்’ என்கிறாள். ஈர நெல் வித்தி - அன்பாகிற நெல்லை வித்தி. 2இவள், அன்பு இருக்கும்படி ஆராய்ச்சி செய்ததும் இவ்விஷயத்திலே ஆயிற்று; “முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” என்கிறபடியே, இளமைப் பருவம் தொடங்கி வேறு ஒன்றினையும் அறியாள். 3புறம்பே சில விஷயங்களிலே பற்று உண்டாய் விரக்தி பிறக்க வேண்டா ஆயிற்று இவளுக்கு. 4தன் சம்பந்தமான ஞானத்துக்கு உபகாரகமான மூல சுக்ருதமும் அவன்தானே ஆயிற்று. முளைத்த - 5எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்கும்போதும் முளைப்பிக்கும் சக்தி உண்டாகும்போதும் அவன் உண்டாக்க வேண்டுமே;

_____________________________________________________

1. அன்னை சொல்லை எருவாகவும், ஊரார் பழியை நீராகவும் உருவகம்
  செய்யாதது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘எருவாவது’
  என்று தொடங்கி.

2. பொதுவிலே “ஈரம்” என்றால், போதியதாமோ? இன்ன விஷயத்தில் ஈரம்
  என்று விசேடிக்க வேண்டாவோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘இவள்’ என்று தொடங்கி. என்றது, “ஈர நெல் வித்தி முளைத்த” என்பது,
  “காரமர் மேனிக்கு” விசேஷணமாகையாலே, இவ்விஷயத்தில் ஆராய்ச்சி
  செய்தது வெளிப்படை என்றபடி. மேற்கூறியதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
  “முலையோ” என்று தொடங்கி. இது, திருவிருத்தம், 60.

3. இதனால், மற்றையோரைக்காட்டிலும் இவளுக்குள்ள வேறுபாட்டினைக்
  காட்டுகிறார் ‘புறம்பே’ என்று தொடங்கி.

4. பகவத் விஷயத்தில் பற்று உண்டாகைக்குக் காரணம், பூர்வ ஜன்ம
  புண்ணியமாக இருக்க, “ஈர நெல் வித்தி” என்று அவனைக் காரணமாகச்
  சொல்லலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தன்
  சம்பந்தமான’ என்று தொடங்கி. என்றது, இவர்க்கு மூல சிக்ருதமும் அவனே
  என்றபடி. சுக்ருதம் - புண்ணியம்.

5. பாசுரத்தில், முன்னும் பின்னும் அவன் கிருஷியை அருளிச்செய்கையாலே,
  “முளைத்த” என்பதற்கு, முளைப்பித்த என்பது பொருளாகக் கொள்க.
  சாதனம் உண்டானால் சாத்தியம் தன்னடையே சித்தியாதோ, இவன்
  முளைப்பிக்க வேணுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘எருவும் இட்டு’ என்று தொடங்கி.