பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
135

New Page 2

    பொ-ரை :- பேயின் முலையை உண்டு சகடத்தின் மேலே பாய்ந்து மருத மரங்களின் நடுவே சென்று அவற்றை வேரோடு கீழே தள்ளிப் புள்ளின் வாயைப் பிளந்து யானையைக் கொன்ற, தூய்மை பொருந்திய புன்சிரிப்பையும் கோவைக்கனி போன்ற திருவாயினையுமுடைய பிரானை, தோழீ! தாய்மார்கள் நாணுறும்படியாகச் சேர்வது எப்பொழுதோ? என்கிறாள்.

    வி-கு :-
பேய் - பூதனை, சகடம்-சகடாசுரன். புள்-பகாசுரன். களறு-குவலயாபீடம். அட்டபிரானை அன்னையர் நாண உறுகின்றது எந்நாள் கொலோ? என்க. தாய்மார், ஐவராதலின் அன்னையர் என்கிறாள். “ஐவர் நலன் ஓம்ப” என்றார் திருத்தக்கதேவரும். தூ-பரி சுத்தம்.

    ஈடு :-
எட்டாம் பாட்டு. 1மஹோபகாரகனைக் ‘குணம் இல்லாதவன்’ என்று சொல்லுகிற தாய்மார் ‘இவனை யாகாதே நாம் குணம் இல்லாதவன் என்றது’ என்று நாணம் உறும்படி அவனைக் காண்பது என்றோ! என்கிறாள். அவன், தன் சத்தையை உண்டாக்கி, நம் சத்தையைத் தந்தான்’ நாம் அவன் சத்தையால் உண்டான பலத்தைப் பெறுவது என்றோ என்கிறாள்.

    பேய் முலை உண்டு - பூதனையால் வந்த ஆபத்தைத் தப்பி, சகடம் பாய்ந்து-2உணர்ந்து நோக்க ஒண்ணாதபடி காவலாக வைத்த சக்கரம் அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வர அதனை வருத்தம் இன்றியே முறித்து, மருதிடை போய் முதல் சாய்த்து-தவழ்ந்து போகா நிற்க இடைவெளி இல்லாமல் வழியிலே நின்ற மருத மரங்களின் நடுவே போய்த்தான் அவற்றைத் தப்பிப் போன அளவே அன்றிக்கே, அவை தம்மை வேரோடு பறித்து விழவிட்டு. அன்றிக்கே, முதல் சாய்த்து-குருந்தத்தைப் பறித்துப் போகட்டு என்னுதல். புள் வாய் பிளந்து-பகாசுரனை வாயைக் கிழித்து, களிறு அட்ட - குவலயாபீடத்தைக் கொன்ற, தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை - தடையாக வந்தவைதாம் பிரபலமாயிருக்கச் செய்தேயும், தன் வீரத்துக்கு அவை 3பாத்தம் போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி.

_________________________________________________

1. “பேய் முலை உண்டு” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
  ‘மஹோபகாரகன்’ என்கிறார். மேலே கூறிய வாக்கியத்தை விவரிக்கிறார்
  ‘அவன், தன் சத்தையை’ என்று தொடங்கி.

2. ‘உணர்ந்து நோக்க ஒண்ணாதபடி’ என்றது, காவலாக வைத்தது
  ஆகையாலே உணர்ந்து நோக்கப் போகாது என்றபடி.

3. பாத்தம்-பாத்திரம்; விஷயம் என்றபடி.