பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
141

ஆதல

ஆதலால், தோழிமேல் ஆணையாமத்தனை. 1இதற்கு உடன்பட்ட தோழியை ஒழிய, ‘வேறு ஒரு பரதேவதை உண்டு’ என்று இராளே, இவள்தான். ‘இது வார்த்தையளவேயாய்ப் போகாமல், இவள் இத்தனையும் செய்து தலைக்கட்டப் பெறுவதுகாண்’ என்னும் தன் நினைவு தோன்ற இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து ‘என் தோழி’ என்று அணைத்துக்கொள்ளுகிறாள். அன்றிக்கே, இவள் எண்ணம் கூடப் புகாநின்றதோ என்று இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து 2ஆணை என்? என்கிறாள் என்னுதல்; ஆணை என்-தடை என்? ஆணை-தடை. என்றது, அவன் என் சொல் வழியே வருமாகில், நீ என் கருத்திலே ஒழுகுவுதியாகில், தாய்மார் தொடக்கமானார் வார்த்தை கொண்டு காரியம் இல்லையாயிற்ற பின்பு, இனித் தடை என்? என்றபடி. 3அவன் இவள் வழியே வருகையாவது என்? என்னில், சர்வாதிகன் ஆகையாலே அழிய விடானே, இத்தோழிதானும் இவள் கருத்திலே நடப்பாள் ஒருத்தியே. உலகுதோறு அலர் தூற்றி-உலகங்கள் எங்கும் புக்கு 4அழிக்கக் கடவேன். என்னை ஊரார் பழி சொல்லும்படி செய்தானாகில், தன்னை உலகம் எல்லாம் பழி சொல்லும்படி செய்கிறேன். 5‘அசாதாரண விபூதியிலுள்ளார் தாம் பிறர் அறியும்படி இரார்களே அன்றோ’ என்றிருக்கைக்கு,

________________________________________________

1. ஆணை இடும்போது ஒரு தெய்வத்தின்மேல் ஆணை இட வேண்டாவோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இதற்கு உடன்பட்ட’ என்று
  தொடங்கி.

2. “என்” என்ற சொல்லை, இடைநிலைத் தீவகமாக “ஆணை” என்ற
  சொல்லோடும், “தோழி” என்ற சொல்லோடும் கூட்டுக. “ஆணை”
  என்பதற்கு, இரு பொருள்: ஆணை என்றும், தடை என்றும்.

3. மேல் வாக்கிய விவரணம், ‘அவன் இவள்’ என்று தொடங்கும் வாக்கியம்.
  ‘சர்வாதிகன்’ என்றது, “தேவபிரான்” என்றதனை நோக்கி.

4. ‘அழிக்கக் கடவேன்’ என்றது, குணாதிகன் என்ற பெருமையை அழிப்பேன்
  என்றபடி.

5. தேவபிரானைப் பழி சொல்லுகிறாளாகில், உலகுதோறு அலர் தூற்றுவது
  எற்றிற்கு? என்ன அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அசாதாரண’ என்று
  தொடங்கி. என்றது, குணத்தைப் போலவே தோஷத்தையும் எண்ணுகிற
  அவ்விபூதியிலன்றிக்கே, குணத்தையும் தோஷமாகக் கொள்ளுகிற
  இவ்வுலகத்திலே என்றபடி. அசாதாரண விபூதி-பரமபதம். ‘தாம் பிறர்
  அறியும்படி இரார்களே அன்றோ’ என்றது, இவள் செய்கிற செயல்
  தங்களுக்கு விருப்பமில்லாததாகிலும் பிறர் அறியாதபடி
  அடக்கிக்கொண்டிருப்பவர்களே அன்றோ என்றபடி.