பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
260

New Page 1

செய்வேனும் யானே என்னும் - 1கிரியைகளின் கர்த்தாக்களை இடுவித்து அவற்றைச் செய்விக்கின்றவனும் யானே என்னும். அன்றிக்கே, அவர்கள் இவற்றைக்கொண்டு என்னை அடையும்படி செய்வேனும் யானே என்னும் என்னுதல். செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ - கரிய கண்ணையுடையவளான தன்மை நீங்கி, புண்டரீகாக்ஷன் படியாய் விட்டது. என்றது, மையக்கண்ணாளான தன்மை போய், 2செய்யகோலத் தடங்கண்ணன்படியாய் விட்டது என்றபடி. செய்ய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் - சொல்ல முடியும், முடியாது என்று அறியாதே, சொல்லு, சொல்லு என்று என்னை அலைக்கிற 3படுபாடரான உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது? செய்ய கனிவாய் இளமான் திறத்தே-4அநுகாரத்தாலே புணர்ச்சி சமயத்திற் போலே இருக்கிற இவள், உதடு செவ்விபெற்று வரும்படி வேறுபட்டவளாய், மிக இளையளாய் இருக்கிறபடி நான் எதனைச் சொல்லுவது. 5பிரிவில் வெளுத்திருக்கை தக்கதாக இருக்க, இவள் உதடு செவ்விபெற்று வருகின்றதே அன்றோ அநுகாரத்தால் வந்த தரிப்பாலே. சிவந்த கனி போலே இருக்கிற உதட்டினையுடையளாய், இளையமான் போலே பேதையான இவள் இடையாட்டத்தே.

(4)

_____________________________________________________

1. “செய்வார்களைச் செய்வேணும்” என்பதற்கு, இரண்டு வகையாகப் பொருள்
   அருளிச்செய்கிறார். முதற்பொருள், செய்வார்களை - விரும்பப்படுகின்ற
   சுவர்க்கம் முதலான பல சாதன கர்த்தாக்களை, செய்வேனும் - வேறு
   தேவர்களைப் பற்றும்படி செய்வேனும் என்பது. இதனை, அருளிச்செய்கிறார்
   ‘கிரியைகளின்’ என்று தொடங்கி. செய்வார்களை-மோக்ஷத்திற்குச் சாதனமான
   யஜ்ஞம் முதலான கர்மங்களைச் செய்கிறவர்களை, செய்வேனும்-என்னை
   அடையச் செய்வேனும் என்பது இரண்டாவது பொருள். இதனை,
   அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.

2. ‘செய்ய கோலத் தடங்கண்ணன் படியாய்விட்டது’ என்றது, செந்தாமரைக்
   கண்ணணுக்கே அன்றோ இச்செயல்கள் எல்லாம் உள்ளது என்றபடி.

3. படுபாடர் - எங்ஙனமாயினும் விஷயத்தைத் தெரிந்துகோடல் வேண்டும்
  என்ற எண்ணமுள்ளவர்கள்.

4. அநுகாரம் - சொல் அநுகாரம்.


5. அநுகாரத்தாலே என்று கூறுதல் ஏன்? இயற்கையிலே சிவந்திருத்தல்
  ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பிரிவில்’ என்று
  தொடங்கி.