பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
343

க

காலிலே குனியப் போம்; அவனுக்கு நித்தியமாகச் செல்லாநிற்கும். 1இனி, அவனுக்குக் கர்மம் என்னப்பார்க்கிறது, அநுக்கிரஹத்தை அன்றோ, அதுதானும் நித்தியமே அன்றோ அவனுக்கு. 2இவனுக்கு இவன்தன் அளவிலே பிறக்க அமையும், அவனுக்கு எல்லார்க்குமாகப் பிறக்க வேணுமே. 3இவனுக்குக் கர்மங்காரணமாக வந்ததாகையாலே தன்பொருட்டேயாயிருக்கும், அவனுக்கு அநுக்கிரஹம் காரணமாக வந்ததாகையாலே பிறர் பொருட்டேயாயிருக்கும். 4“அருச்சுனா! உன்னுடைய பிறவிகளைப் போலவே என்னுடைய பல பிறவிகளும் கழிந்து போயின” என்றான் அன்றோ. 5“தவச - உனக்கும்” என்கிறது, உன்னுடைய பிறவி மெய்யாய் இருக்குமாறு போன்று, என்னுடைய பிறவி ஐந்திர ஜாலிகம் அன்றுகாண் என்பதற்கு.

____________________________________________________

1. நித்தியமாகச் செல்லுகைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இனி அவனுக்கு’ என்று தொடங்கி. அது தானும்
  நித்தியமேயன்றோ அவனுக்கு, ஆன பின்பு அநுக்ரஹத்துக்கு
  முடிவில்லாமையாலே, அநுக்ரஹ காரியமான பிறவியும் நித்தியமாகச்
  செல்லாநிற்கும் என்றபடி. ‘அதுதானும்’ என்ற உம்மை, ஸ்வரூப
  நித்தியத்வத்தைத் தழுவுகிறது.

2. நித்யமாயிருக்கும் தன்மையாலே வேறுபாட்டினை அருளிச்செய்து,
  பரார்த்ததையாலும் வேறுபட்டது என்கிறார் ‘இவனுக்கு இவன் தன்’ என்று
  தொடங்கி.

3. இவன் பிறப்பு தன் பொருட்டேயாகவும், அவன் பிறப்பு பிறர்
  பொருட்டேயாகவும் இருப்பதற்குக் காரணம் யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். ‘இவனுக்குக் கர்மம்’ என்று தொடங்கி.

4. ஈச்வரனுடைய அவதாரங்கள் எண்ணிறந்தன என்பதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார் ‘அருச்சுனா!’ என்று தொடங்கி.

  “பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவச அர்ஜு ந
   தாந்யஹம் வேதஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப”

  என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.

5. எடுத்த சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘தவச’ என்று
  தொடங்கி. என்றது, பிறப்பு இல்லாதவனாக இருக்கிற நீ, இப்படிப் பல
  அவதாரங்களைச் செய்கிறேன் என்றால், இது ஐந்திர ஜாலிகம் ஒழியச்
  சத்தியமாகக் கூடுமோ? என்று அருச்சுனன் சங்கிக்க, உனது பிறவி எப்படி
  உண்மையோ, அப்படியே எனது பிறவியும் உண்மை என்கிறான் என்றபடி.
  “தவச” என்கிறது, திருஷ்டாந்தார்த்தம் என்கிறது.