பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
44

1

1“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார்கண்டீரே; பின்னை இத்திருவாய்மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச்செய்தார். 2பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும். உயிர் வல் சாபம் போயிற்று-உயிரினுடைய வலிய சாபம் போயிற்றது. 3சாபத்தாலே பற்றப்பட்டவரைப்போலே அநுபவித்தால் அல்லது அழியாதது ஆகையாலே, பாபத்தைச் ‘சாபம்’ என்கிறார். அன்றிக்கே, 4ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற அவித்யை முதலானவைகள் போயிற்றன என்னுதலுமாம். நலியும் நரகமும் நைந்த-கர்மங்களுக்குத் தகுதியாகச் சேதனர்களைக் கொண்டுபோய் வருத்துகின்ற 5நரகங்களும் சிதிலமாயின. 6நரக அநுபவத்திற்கு ஆள் இல்லாமையாலே, நரகங்களும் கட்டி மேய்க்கை தவிர்ந்து கோப்புக் குலைந்தன. ஆயின், அவ்விடங்கட்கு அதிகாரிகளாயிருக்குமவர்கள் செய்வன என்? என்னில், இங்கு நமனுக்கு யாது ஒன்றும் இல்லை-யமனும் தனக்கு அடைத்த இந்நிலத்தில் ஆராயலாவது ஒன்று இல்லை; இனிப் பரமபதத்தில் சென்று ஆராயில் ஆராயு மத்தனை என்பார் “இங்கு” என்கிறார். தர்ம புத்திரனுக்கும் ஒருகால் நரகலோகத்தைக்

______________________________________________________

1. “வீற்றிருந்தேழுலகும்” என்ற திருவாய்மொழியில் “போற்றி என்றே” என்று
  பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தமையை உளங்கோடல் தகும்.

2. ‘பெரியாழ்வாரைப்போலே’ என்று, அவரை நம்மாழ்வார்க்குத்
  திருஷ்டாந்தமாக்கலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘பரமாசாரியரான’ என்று தொடங்கி.

3. பாவத்தைச் “சாபம்” என்ற சொல்லால் கூறல் பொருந்துமோ? என்னும்
  வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சாபத்தாலே’ என்று தொடங்கி.

4. இரண்டாவது பொருளில் “சாபம்” என்பது தொகுதி ஒருமை. சாபங்கள்
  என்பது பொருள்.

5. “நரகம்” என்றதனைத் தொகுதி ஒருமையாகக் கொண்டு பொருள்
  அருளிச்செய்கிறார் ‘நரகங்கள்’ என்று.

6. பாவங்கள் போன மாத்திரத்திலே, நரகங்கள் அழியக் கூடுமோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நரக அநுபவத்திற்கு’ என்று தொடங்கி.