பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
45

காணுதல் செய்ய வேண்டியிருந்ததேயன்றோ, 1அதற்கும் ஆள் இல்லை என்பார் ‘யாது ஒன்றும் இல்லை’ என்கிறார்.

    இவை எல்லாம் உண்டாவன கிருத யுகத்திலே அன்றோ, கலியுகத்திலே உண்டாவன ஆமோ? என்னில், கலியும்கெடும்-அந்தக் கலிகாலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக்கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி, ‘கலியும்கெடும்’ என்ற இதனை எதிர்காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம். அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே 2ஒரே ரீதியாகச் சொல்லவுமாம். நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில், கண்டு கொண்மின்-அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில், ‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச்செய்கிறார் மேல்: 3“எந்தத் தேசத்தில் திரு அட்டாக்ஷர மந்திர சித்தியையுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ அங்கு வியாதி துர்பிக்ஷம் களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே, பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப்பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? கடல் வண்ணன் பூதங்கள்-அவனுடைய சிரமஹரமான வடிவழகை அநுசந்தித்து அதனாலே தங்கள் சத்தையாம்படி இருக்குவர்கள். “பூ ஸத்தாயாம்” என்று தாதுவாகையாலே, அவன் சத்தையே சத்தையாய் அறுகையாலே ‘பூதம்’ என்ற சொல் அடியார்களைக் காட்டுகிறது. மண்

___________________________________________________


1. ‘அதற்கும்’ என்றது, தர்மபுத்திரனைப்போல் ஒருகால் நரக தரிசனம்
  செய்கைக்கும் என்றபடி.

2. ‘ஒரே ரீதியாக’ என்றது, மேலே உள்ள “போயிற்று, நைந்த” என்ற
  பதங்களோடே சேரும்படி இதனையும் இறந்த காலமாகவே கொண்டு
  பொருள் கூறுதல் என்றபடி. கெடும்-கெட்டது என்றபடி.

3. பாகவதர்களுடைய சஞ்சாரம் உண்டானால் பொல்லாங்குகள் போமோ?
  என்ன, ‘போகும்’ என்பதனைப் பிரமாணத்தோடு எடுத்துக் காட்டுகிறார்
  ‘எந்தத் தேசத்தில்’ என்று தொடங்கி.

  “யத்ர அஷ்டாக்ஷர சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே
   ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா:”

  என்பது சுலோகம்.