பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
480

    நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று-திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேச்வரன் திருவடிகளே நமக்கு உபாயம் என்று. ஆதிசேடனைப் படுக்கையாகவுடைத்தாயிருத்தல் அறப்பெரியவனுக்கு லக்ஷணமாகையாலே, சர்வாதிகனே சரண்யன் என்கிறது. 1இவனுடைய உபாய பாவத்தில் புருஷகாரமாக வல்லார் அவள் பரிகரத்திலுள்ளாராகாதே. 2படுக்கை கிடப்பது அந்தப்புரத்திலன்றோ. அடியார்கள் விஷயத்தில் உபகார சீலனாதலின் ‘நம்பிரான்’ என்கிறது. ‘சரணே சரண்’ என்ற ஏகாரத்தாலே, 3வேறு உபாயத்தை விரும்பாத உபாயம் என்கிறது. இத்தால் ‘ஏக’ பதத்தில் அர்த்தம் சொல்லுகிறது. அன்றிக்கே, சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியாநின்றாலும் அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர். மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம். நாடொறும் ஏக சிந்தையனாய் - புறம்பு உண்டான சிந்தனை போய், இவ்விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தையுடையராய், 4பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியாநின்றார்களன்றோ,

____________________________________________________

1. சர்வேசுவரனை உபாயமாகப் பற்றும்போது துவயத்திற் கூறியதைப்
  போன்று புருஷகாரம் முன்னாகப் பற்ற வேண்டாவோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இவனுடைய’ என்று தொடங்கி. இதனால்,
  திருவனந்தாழ்வானே புருஷகாரம் என்பது கருத்து.

2. இவன் பிராட்டி பரிகரமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘படுக்கை கிடப்பது’ என்று தொடங்கி.

3. “சரணே” என்ற ஏகாரத்திற்கு இரண்டு பொருள்: முதற் பொருள், வேறு
   உபாயங்களை விரும்பாமை. இதனையே அருளிச்செய்கிறார் ‘வேறு
   உபாயத்தை’ என்று தொடங்கி. இதனை விவரணம் செய்கிறார் ‘இத்தால்’
   என்று தொடங்கி. ‘ஏகபதம்’ என்றது, சரம சுலோகத்திலுள்ள “ஏகம்”
   என்ற பதத்தை. “எகம்” என்ற பதம், ஏகாரத்தின் பொருளது;
  “என்னையே” என்பது பொருளாம். இரண்டாவது பொருள், ‘சம்சார
   சம்பந்தப்பட்ட’ என்று தொடங்குவது. இப்பொருள் தன்னையே விவரணம்
   செய்கிறார் ‘இஃதொழிய’ என்று தொடங்கி.

4. இத்துணை அருமையானால், “மித்ரபாவோ” என்றும், “தொழுது, எழுதும்
  என்னுமிது மிகையாதலின்” என்றும் பிரபத்தியை எளிதாகச் சொல்லுவான்
  என்? என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பொருளீட்டுதற்கு’
  என்று தொடங்கி. சிராய் - மரச்சக்கை; ஈண்டுக் கப்பலைக் காட்டுகிறது.