பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
481

New Page 1

பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ்விஷயத்தில். 1சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது. குருகூர்ச் சடகோபன் மாறன்-2அவையெல்லாவற்றிற்கும் அடியான பிறப்பு இருக்கிறபடி. ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் - தாம் உளராகைக்காகச் சொன்ன அந்தாதி ஆயிரத்திலும் இப்பத்தினைக் கற்க வல்லவர்கள். மாக வைகுந்தத்து - மஹாகாசம் என்று பேரையுடைய ஸ்ரீவைகுண்டத்திலே. வைகலும் மகிழ்வு எய்துவர்-காலம் என்னும் ஒருபொருள் உள்ளவரையிலும் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர். 3‘அநுசந்தானத்துக்குத் தடை வாராதபடி பண்ணியருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும்படியான சம்சாரத்தைவிட்டு, பகவானுடைய அநுபவத்துக்கு நழுவுதல் ஒரு நாளும் இல்லாத பரமபதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி. ‘மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை. ‘கம்’ என்றது ஆகாசம்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

 

        பிறந்துலகம் காத்தளிக்கும் பேரருட்கண்ணா! உன்
        சிறந்தகுணத் தாலுருகுஞ் சீலத் - திறந்தவிர்ந்து
        சேர்ந்தநுப விக்குநிலை செய்யென்ற சீர்மாறன்
        வாய்ந்தபதத் தேமனமே! வைகு.

(50)

 

ஐந்தாம்பத்து ஈட்டின் தமிழாக்கம் முற்றிற்று.

 ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

நம்பிள்ளை நற்றாள் வாழ்க.

 வடக்குத் திருவீதிப் பிள்ளை மலரடி வாழ்க.

மாறன் மலரடி வாழ்க.

____________________________________________________

 

1. “நாடொறும் ஏக சிந்தையனாய்” என்றதனால் பலித்த பொருளை
   அருளிச்செய்கிறார் ‘சம்சாரத்தின் இயல்பால்’ என்று தொடங்கி.
   இதனால், இது ஸ்வரூபமாகையாலே சாதனத்தில் சேராது என்றபடி.

2. “குருகூர்” என்று விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘அவையெல்லாவற்றிற்கும்’ என்று தொடங்கி. ஆக ‘தாம் உளராகைக்காக.

3. இத்திருவாய்மொழியில் சொன்ன பொருளுக்குத் தகுதியாகப் பலம்
  அருளிச்செய்கிறார் ‘அநுசந்தானத்துக்கு’ என்று தொடங்கி.