பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
161

1

1“இலக்குமணன் செல்வத்தால் நிறைந்தவன்” என்னுமாறுபோலே, சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, கடக்கக் கிடந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போலன்றிக்கே, கிட்ட நின்று அடிமை செய்யும் இளையபெருமாளைப் போலே. 2‘காணவேண்டும்’ என்னும் ஆசையோடே இருந்து வேறு சரீரத்தை அடைந்து வேறு தேசத்திலே போய்க் காண்கை யன்றிக்கே, பசித்த இடத்தே சோறு பெறுமாறு போலே, ஆசைப்பட்ட இடத்தே அநுபவிக்கப் பெறுதலின் ‘திருவிண்ணகர்க் கண்டேன்’ என்கிறார்; 3“நான் சென்று நாடி நறையூரிற் கண்டேனே” என்னுமாறு போலே.

(1)

576.

        கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
        தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
        கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
        தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.

    பொ-ரை :-
அநுபவிக்கின்ற இன்பமும் துன்பமுமாகி, கலக்கமும் தேற்றமுமாகி, சீற்றமும் அருளுமாகி. நெருப்பும் நிழலுமாகிக் கண்டு கொள்வதற்கு அரியவனாகிய பெருமானாகி, என்னை ஆள்கின்றவனுடைய ஊரானது, தெளிந்த அலைகளையுடைய புனலால் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் நல்ல நகரமேயாகும்.

    வி-கு :-
ஆய் ஆய் கண்டுகோடற்கு அரிய பெருமான். ஊர் திருவிண்ணகராகிய நல் நகர் என்க. தண்டம் - கோபம். தழல் - நெருப்பு.

 

1. மிக்க செல்வமாவது யாது? என்ன, ‘இலக்குமணன்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்.

 
ஸர்வ ப்ரியகர: தஸ்ய ராமஸ்ய அபி ஸரீரத:
  லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:

  என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 28.

      சுலோகத்துக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘சம்பந்தம் ஒத்திருக்கச்
  செய்தே’ என்று தொடங்கி.

2. “திருவிண்ணகர்க் கண்டேன்” என்கிறவருடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘காணவேண்டும் என்னும்’ என்று தொடங்கி.

3. ஆசைப்பட்ட இடத்தே அநுபவிக்கப்பெற்ற பேர் உளரோ? என்ன, ‘உளர்’
  என்று, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நான் சென்று’ என்று
  தொடங்கி. இது, பெரிய திருமொழி, 6. 8 : 1.