பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
223

New Page 1

    பொ-ரை :- குற்றம் இல்லாத பெரிய மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் உயர்ந்து விளங்குகின்ற திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைத் தொழுகின்ற இவளிடத்தில், அன்னைமீர்! உங்களுக்கு இனி ஆசைவேண்டா; நீங்கள் ஆசையை விடுங்கோள்; வெண்ணிறத்தையுடைய பிரகாசம் பொருந்திய சங்கு என்றும் சக்கரம் என்றும் தாமரை போன்ற விசாலமான திருக்கண்கள் என்றும் சொல்லிக்கொண்டு அழகிய குவளைமலர் போன்ற கண்களிலே தண்ணீர் தேங்கும்படி நின்று நின்று குமுறுவாள்.

    வி-கு :- அன்னைமீர்! தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை; இனி நீர் விடுமின் என்றும், கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறும் என்றும் கூட்டுக. இவளை, வேற்றுமை மயக்கம். ‘இவளை விடுமின்’ என்று கூட்டி நேரே பொருள் கோடலுமாம்.

    இத்திருவாய்மொழி, எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்

    ஈடு :- முதற்பாட்டு. 1இவள் தன்மை அறியாதே திருத்தொலை வில்லிமங்கலத்தைக் காட்டின பின்பு உங்கள் நல்வார்த்தைக்கு இவள் மீளுவாளோ? என்கிறாள்.

    துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை இனி நீர் விடுமின் - 2‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலேயுள்ளவை’ என்னுதல், ‘சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல், உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ? அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை

 

1. “உமக்கு ஆசை இல்லை விடுமினோ” என்றதிலே நோக்காக, அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. “தொலைவில்லிமங்கலம் தொழும் இவளை” என்று வைத்து, “உமக்கு
  ஆசை இல்லை” என்கிற தோழியினுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘உனக்கு இப்போது’ என்று தொடங்கி. என்றது,
  பரமபதத்திலே ஈடுபட்டவளானாளாகில் ‘உனக்கு இப்போது உதவாது
  தூரத்திலே உள்ளது’ என்று மீட்கலாம்; அவதாரத்திலே
  ஈடுபட்டவளானாளாகில் ‘இறந்த காலத்திலே உள்ளது’ என்று மீட்கலாம்;
  திருத்தொலைவில்லிமங்கலத்திலே நிற்கிறவனிடத்திலே
  ஈடுபட்டவளானாளாகில் ‘பிரத்தியக்ஷவிஷயம் அபரிச்சிந்நம்’ என்று
  மீட்கலாம்; இவற்றை எல்லாம் வெளி நிலமாக்கித் திருத்தொலைவில்லி
  மங்கலத்திலே ஈடுபட்டவளான இவளை மீட்க விரகு உண்டோ? என்றபடி.
  அசல் இட்டு - தேவபிரானையும் புறம்பாக்கி.